close
Choose your channels

Achamindri (aka) Achamintri Review

Review by IndiaGlitz [ Friday, December 30, 2016 • தமிழ் ]
Achamindri (aka) Achamintri Review
Banner:
Triple V Records
Cast:
Vijay Vasanth, Saranya Ponvannan, Samuthirakani, Srushti Dange, Radha Ravi
Direction:
Rajapandi
Production:
Vinoth Kumar
Music:
Premgi Amaren
Movie:
Achamindri

2014ல் ‘என்னமோ நடக்குது’ என்ற வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர் ராஜபாண்டி, நடிகர் விஜய் வசந்த் மற்றும் விவிவி ரெகார்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘அச்சமின்றி’. கல்வித் துறையில் உள்ள பிரச்சனைகள் பற்றிய படம் என்ற விளம்பரத்துடன் வெளியாகியிருக்கும் படம், இந்தக் கூட்டணியின் வெற்றியை தக்கவைக்குமா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

சத்யா (விஜய் வசந்த்) ஒரு பிக்பாக்கெட் திருடன் ஆனால் நல்ல மனமும் உதவும் குணமும் படைத்தவன். அவன் கண்டவுடன் காதலில் விழவைக்கும் மலர் (ஸ்ருஷ்டி டாங்கே) ஏழைச் சிறுவர்களின் கல்வி மீது அக்கறைகொண்டவள்.

இவர்களோடு நேர்மையும் துணிச்சலும் நிறைந்த காவல்துறை அதிகாரி சத்யா (சமுத்திரகனி), கல்வி அமைச்சர் கரிகாலன் (ராதாரவி), குற்றச் செயல்களில் ஈடுபடும் அவரது உதவியாளர் (ஜெயகுமார்), கல்வி நிறுவனங்களின் தலைமை வகிக்கும் பணக்காரப் பெண் ராஜலட்சுமி (சரண்யா பொன்வண்ணன்) ஆகியோரும் காண்பிக்கப்படுகின்றனர்.

சத்யா, சக்தி மற்றும் மலர் ஒரு சில செயல்களால் கல்வித் துறை சார்ந்த  ஒரு  பெரும்குற்றத்தில் ஈடுபட்டிருக்கும் சூழ்ச்சிக்காரர்களிடம் சிக்குகிறார்கள். அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இந்த மூவரும் உயிர் பிழைத்து மேற்சொன்ன குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருகிறார்களா என்பதே மீதிக் கதை.

அரசுப் பள்ளிகளில் பல காலமாக நிலவிவரும் பிரச்சனைகள், தனியார் பள்ளிகளின் லாப வெறி ஆகியவற்றை வைத்து மாநில கல்வித் துறை தொடர்பான ஒரு முக்கியமான செய்தியை (மெசேஜ்) ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்தின் வாயிலாகக் கூற முயன்றிருக்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.

கல்வித் துறை தொடர்பான விவகாரங்களில் அவர் செலுத்தியிருக்கும் அக்கறையும் அவை வெளிப்பட்டிருக்கும் விதமும் பெரிதும் பாராட்டுக்குரியவை. கமர்ஷியல் என்ற பெயரில் அளவுக்கதிகமாக சேர்க்கப்பட்ட விஷயங்களை குறைத்து மையக் கதையிலும் அதை சொல்லும் முறையிலும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் படத்தின் மூலம் அவர் தெரிவிக்க விரும்பிய செய்தி இன்னும் சிறப்பான தாக்கத்தை உருவாக்கியிருக்கும்.

கல்வித் துறையில் பணியாற்றும் ஒரு நேர்மையும் துணிச்சலும் மிக்க ஐஏஎஸ் அதிகாரி கொல்லப்படுவதில் படம் தொடங்கும்போது பார்வையாளர்களின் ஆர்வம் கூடுகிறது. ஆனால் அதன் பின் ஹீரோ அறிமுகப் பாடல், காமடிக் காட்சிகள், காதல் காட்சிகள், டூயட் பாடல் ஆகியவை வருகின்றன.

இவற்றுக்கிடையே பல்வேறு கதாபாத்திரங்களும் தொடர்பற்ற சம்பவங்களும் வருகின்றன. காமடி ஓரளவு மட்டுமே சிரிக்க வைக்கிறது. பாடல்கள் திரைக்கதை வேகத்தைக் குறைப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. நாயகனும் நாயகியும் உயிரைக் காப்பாற்றப் போராடும் நேரத்தில் ஒரு குத்துப் பாடல் வருகிறது.

கதை நகர்வில் லாஜிக் ஓட்டைகளும் மேக்கிங்கில் சில குறைகளும் உள்ளன. கமர்ஷியல் படம் என்பதால் லாஜிக் ஓட்டைகளை ஓரளவு பொறுத்துக்கொள்ளலாம். பட்ஜெட்டுக்காக மேக்கிங் பிழைகளையும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இதையும் மீறி சில விஷயங்கள் உறுத்துகின்றன. உதாரணமாக ஒரு ரவுடிக் கும்பலின் தலைவன் ஒரு முக்கியமான குற்றம் தொடர்பான பொருளை திருடுபோகும் படி தன் பர்ஸிலேயேவா வைத்திருப்பான்? வக்கீல் கேட்ட மறுகணம் அமைச்சர் வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்வது எப்படி? இந்தக் கேள்விகளை எல்லாம் கொஞ்சம் கவனித்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் இந்தக் குறைகளையெல்லாம் மீறி பரபரப்பு நம்மைத்  தொற்றிக்கொள்ளும் மர்மங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் வரும் ஒரு முக்கியமான திருப்பம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. முதல் பாதியில் அதிக கதாபாத்திரங்களையும் துணைக் கதைகளையும் காட்டியது இந்த திருப்பத்தின் தாக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. கதாபாத்திரங்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று நம்மை யோசித்துக்கொண்டே இருக்க வைப்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. 
லாபவெறிகொண்ட தனியார் பள்ளிகளுக்கும் அவர்கள் தழைக்க உதவும் உழல்வாதி அரசு ஊழியர்களுக்கும் எதிரான செய்திதான் படத்தின் இதயம் போன்றது. இந்த விஷயம் படத்தில் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அதற்குப் பெரிதும் உதவுவது ஜி.ராதாகிருஷ்ணனின் வசனங்கள்.

குறிப்பாக அந்த நீண்ட நீதிமன்றக் காட்சியில் அரசுப் பள்ளிகளின் பிரச்சனைகள், தனியார் பள்ளிகளின் லாப நோக்கு மற்றும் ஆங்கில மோகத்தில் மக்கள் அரசு பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளையே நாடுவது, ஆகியவை தொடர்பான விமர்சனங்கள் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன அதோடு இந்த மூன்று தரப்புகளின் நியாயங்களும் சரியாகப் பதிவாகியுள்ளன.

விஜய் வசந்த் தன் வேடத்துக்கு சரியாகப் பொருந்துகிறார், ஆக்‌ஷன் காட்சிகளில் கடினமாக உழைத்திருக்கிறார். ஸ்ருஷ்டி டாங்கே அழகாக இருக்கிறார் குறைசொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனியின் நடிப்பு படத்தின் பலம்தான் என்றாலும் அவரை இதே போன்ற கதாபாத்திரத்தில் ஏற்கனவே பார்த்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது ஊமைக் காதலியாக வரும் வித்யா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்.

ராதாரவி இந்த ஆண்டு மற்றுமொரு சிறப்பான துணை நடிப்பைத் தந்திருக்கிறார். சரண்யா இந்தப் படத்தில் யாருக்கும் அம்மா இல்லை என்பது மிகப் பெரிய ஆறுதல். வித்தியாசமான வேடத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

ஜெயகுமார், பரத் ரெட்டி, கும்கி அஸ்வின் ஆகியோர் தங்கள் வேடத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார்கள்.  தலைவாசல் விஜய் மற்றும் ரோகிணி, ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தங்கள் நடிப்பு அனுபவ முத்திரையை பதித்துச் செல்கிறார்கள்

பிரேம்ஜி அமரன் இசையில் டைட்டில் பாடலும் பின்னணி இசையும் சிறப்பு, மற்ற பாடல்கள் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல் ஆகியோர் தங்கள் பணியை பிழையின்றி செய்திருக்கிறார்கள்.

கணேஷ் குமாரின் சண்டை வடிவமைப்பு படத்துக்குப் பெரிய பலம். கடுமையான ஆயுதங்களை வைத்திருக்கும் ரவுடிகளிடமிருந்து நாயகனும் நாயகியும் தப்பிக்கும் சண்டை மற்றும் சேசிங் காட்சிகள் பெருமளவில் நம்பம்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் அந்த கார் சேசிங் சண்டைக் காட்சி குறிப்பிட்டுப் பாராட்டத்தக்கது.

.கல்வித் துறை சார்ந்த ஒரு முக்கியமான செய்தியை சரியான தாக்கம் செலுத்தும் வகையில் பதிவு செய்திருப்பது, சஸ்பன்ஸ் நிறைந்த திரைக்கதை, பரபரப்பான சண்டைக் காட்சிகள் ஆகியவற்றுக்காக ‘அச்சமின்றி’ படத்தைப குறைகளைப் பொருத்துக்கொண்டு பாராட்டலாம்.

Rating: 2.75 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE