close
Choose your channels

ரஜினியை சந்திக்கும் பிரபலங்கள்: சூடு பிடிக்கின்றது தமிழக அரசியல்

Saturday, May 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து ஒரு தீர்மானமான முடிவை எடுத்துவிட்டதாகவும், விரைவில் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ரஜினியை தங்கள் கட்சியில் இணைக்க ஒரு சிலரும், ரஜினியை அரசியலுக்கே வரவிடாமல் செய்ய ஒருசிலரும் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடும் முன்பே அவரை பிரபலங்கள் சந்தித்து வாழ்த்து கூறவும், ஆலோசனைகள் கூறவும் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக இன்று ஒரே நாளில் ரஜினியை தமிழருவி மணியன், நடிகர் ஆனந்த்ராஜ், தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். ரஜினியை பிரபலங்கள் சந்திக்க தொடங்கிவிட்டதால் தமிழக அரசியலில் சூடுபிடித்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஒரு புதிய கூட்டணியை அமைக்க முயற்சித்தவர் தமிழருவி மணியன். இவரது ஆலோசனையின்படி கூட்டணி அமைந்திருந்தால் தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ரஜினியை தமிழருவி மணியன் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஜினியின் அரசியல் பாதையில் தமிழருவி மணியன் முக்கியமானவர்களில் ஒருவராக இருப்பார் என்று கருதப்படுகிறது.

அதேபோல் ரஜினியுடன் 'ராஜாதி ராஜா', 'பாட்ஷா' போன்ற படங்களில் நடித்த ஆனந்த்ராஜ் அவர்களும் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை சந்தித்துள்ளார். ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்ற இவர், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, பரபரப்பான பேட்டியை கொடுத்து கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜி.கே.வாசன் அவர்களின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கும் யுவராஜ், வாசனின் அனுமதியின் பேரிலேயே ரஜினியை சந்தித்துள்ளதாக தெரிகிறது.

ரஜினிகாந்த் இன்று 'காலா' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறார். மும்பையில் இருந்து சென்னை திரும்பியதும் இன்னும் பல அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை செய்து, பின்னர் ரஜினி தனது முடிவை அதிரடியாக அறிவிப்பார் என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.