close
Choose your channels

உதிராத புகழ் கொண்ட 'உதிரிப்பூக்கள்' மகேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Tuesday, July 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் எத்தனையோ இயக்குனர் தோன்றியிருந்தாலும் ஒருசிலர் மட்டுமே புதுமையை புகுத்தும் தைரியம் கொண்டவர்களாக இருந்தனர். அந்த வகையில் புதுமையை புகுத்தும் புரட்சி இயக்குனர்களில் ஒருவர் தான் மகேந்திரன். இன்று அவர் தன்னுடைய 78வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ் திரையுலகில் மகேந்திரன் திரைக்கதை ஆசிரியராகத்தான் அறிமுகமானார். சுமார் 25 திரைப்படங்களுக்கு அவர் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். அதில் சிவாஜி கணேசன் நடித்த 'தங்கப்பதக்கம்', நிறைகுடம், வாழ்ந்து காட்டுகிறேன், போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது.
மகேந்திரன் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முள்ளும் மலரும்' படத்தை இயக்கினார். ரஜினிக்கு இன்று வரையில் மிகச்சிறந்த படமாக இருந்து வரும் இந்த படத்தில் 'காளி' என்ற அற்புதமான கேரக்டரில் ரஜினிகாந்த் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‛கெட்ட பையன் சார் இந்த காளி' என்ற டயலாக் இன்று வரை பிரபலம். அண்ணன் தங்கை பாசக்கதையை 'பாசமலர்' படத்திற்கு பின்னர் மிக அழுத்தமாக சொன்ன கதை இந்த படம்தான் என்பது அனைவரும் ஏற்று கொண்ட ஒன்று
மகேந்திரன் இயக்கிய அடுத்த படம் 'உதிரிப்பூக்கள்'. உலக சினிமா சரித்திரத்தில் கடந்த 100 ஆண்டுகளில் சிறந்த படம் குறித்த பட்டியல் எடுத்தால் கண்டிப்பாக இந்த படம் அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இந்த படத்திற்கு பின்னரே அவர் 'உதிரிப்பூக்கள்' மகேந்திரன் என்றே அடையாளம் காணப்பட்டார். சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய 'சிற்றன்னை' என்ற சிறுகதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய 'உதிரிப்பூக்கள்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்த விஜயனை கொடூர வில்லனாகக் காட்டாமல், ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிற்குள்ளும் இருக்கும் இன்னொரு பக்கத்தையும் மிக அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் மகேந்திரன். வன்முறை, ஆபாசம், குத்துப்பாட்டு போன்ற அனைத்து கமர்ஷியல் விஷயங்களையும் தவிர்த்து, இந்த படத்தின் மூலம் இயக்குனர் மகேந்திரன் சினிமாவிற்கு மிக நேர்மையாக நடந்து கொண்டார்.
உதிரிப்பூக்கள் படத்தை அடுத்து மகேந்திரன் இயக்கிய அடுத்த படம் 'ஜானி'. ரஜினிகாந்த் இரண்டு வேடங்களிலும், ஸ்ரீதேவி பாடகியாகவும் நடித்திருந்த இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோர்களின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியது.
இதன் பின்னர் மகேந்திரன் இயக்கத்தில் சுஹாசினி அறிமுகமான 'நெஞ்சத்தை கிள்ளாதே', 'நண்டு', மெட்டி, அழகிய கண்ணே, கைகொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுது, ஊர்ப்பஞ்சாயத்து, சாசனம் ஆகிய படங்களும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இவற்றில் நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மகேந்திரன் இயக்கம் மட்டுமின்றி நடிகராகவும் சில படங்களில் இருந்துள்ளார். பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'காமராஜ்' படத்தில் கே.ராஜாராம் என்பவரது வேடத்தில் நடித்த மகேந்திரன், சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'தெறி' படத்தின் வில்லனாகவும் நடித்து அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.

மேலும் சோ அவர்களின் துக்ளக் இதழில் 'போஸ்ட் மார்ட்டம்' என்ற பெயரில் திரைவிமர்சனம் எழுதி வந்தவர் இயக்குனர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. சோ நடித்த படமாக இருந்தாலும் அதன் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையாக அவருடைய விமர்சனம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகேந்திரன் அவர்கள் 'சினிமாவும் நானும்' என்னும் நூலினை எழுதியுள்ளார். 'கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இந்த நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சாருஹாசன், அவரது மகள் சுஹாசினி, பேபி அஞ்சு பின்னாளில் நடிகை அஞ்சு, அஸ்வினி, ஆகியோர்களை அறிமுகம் செய்த பெருமை மகேந்திரன் அவர்களுக்கே உண்டு.
மகேந்திரனும் பாலுமகேந்திராவும் இணைந்து பணியாற்றிய படம் 'முள்ளும் மலரும்'. இந்த படத்தில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பதும் இந்த வாய்ப்பை பெற்றுத்தந்தவர் கமல்ஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் மகேந்திரனுக்கு இணையாக இன்னொரு இயக்குனர் தோன்றுவது மிக அரிதான விஷயம். தமிழ் திரையுலகில் அவர் செய்த சாதனை காலத்தால் அழியாதது. இதேபோல் இன்னும் பல அரிய பொக்கிஷ திரைப்படங்களை அவர் தமிழக ரசிகர்களுக்கு தர வேண்டும் என்ற வேண்டுகோளோடு அவருக்கு மீண்டும் ஒருமுறை எங்களுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.