close
Choose your channels

'சின்ன கேப்டன்' விஷால் பிறந்த நாள். ஒரு சிறப்பு பார்வை

Friday, August 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விரைவில் நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் சங்கத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படும் இளையதலைமுறை நடிகர் 'சின்ன கேப்டன்' என்று அன்புடன் அழைக்கப்படும் புரட்சி தளபதி விஷாலுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு முதலில் நமது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

சரத்குமார் நடித்த 'ஐ லவ் இந்தியா' உள்பட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இரண்டாவது மகன் தான் விஷால். இவருடைய அண்ணன் விக்ரம் கிருஷ்ணா, அஜய் என்ற பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'பூப்பறிக்க வருகிறோம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர். விஷால் முதன்முதலில் சினிமாவில் நுழைந்தது உதவி இயக்குனராகத்தான். ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்கள் இயக்கிய 'வேதம்' என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷாலை பார்த்த காந்தி கிருஷ்ணா என்பவர் தன்னுடைய முதல் படமான 'செல்லமே' படத்தின் நாயகன் வேடத்திற்கு விஷாலே பொருத்தமானவர் என்பதை முடிவு செய்தார்.

ஹீரோ வேடம் கிடைத்தவுடன் உடனே ஒப்புக்கொள்ளாமல் உடனடியாக கூத்துப்பட்டறையில் சிலகாலம் நடிப்பு பயிற்சியை முடித்த பின்னர்தான் விஷால் 'செல்லமே' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முதல்படமே வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இரண்டாவது படமாக லிங்குசாமியின் சண்டக்கோழி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவே தயாரித்தார்.

விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட 'சண்டக்கோழி' படம் இன்று வரை விஷாலுக்கும் லிங்குசாமிக்கும் ஒரு சிறந்த படமாக அமைந்தது. பத்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இருவரும் இணைந்து 'சண்டக்கோழி 2' படத்தை விரைவில் உருவாக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு வெற்றி படங்களுக்கு பின்னர் விஷால் நடித்த மூன்றாவது படம் 'திமிறு'. தருண்கோபி இயக்கிய இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகவே ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இளம் ஆக்சன் நாயகன் என கோலிவுட்டில் அழைக்கப்பட்டார்.

இதன்பின்னர் விஷாலுக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்களாக ஹரியின் இயக்கத்தில் வெளியான தாமிரபரணி, பூபதிபாண்டியன் இயக்கத்தில் 'மலைக்கோட்டை' மற்றும் திரு இயக்கத்தில் வெளியான 'தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய படங்கள் ஆகும். தொடர்ந்து ஆக்சன் படங்களாக நடித்து கொண்டிருந்த விஷாலுக்கு மாறுபட்ட வேடம் ஒன்றை கொடுத்து வித்தியாசமான நடிப்பை வெளியே கொண்டு வந்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய 'அவன் இவன்' என்ற படத்தில் விஷாலின் காமெடி கலந்த ஒரு வெகுளித்தனமான நடிப்பை அனைவரும் ரசித்தனர்.

நடிகராக மட்டும் இருந்த விஷால் தயாரிப்பாளராக மாறிய படம் 'பாண்டியநாடு. 'விஷால் பிலிம் பேக்டரி' என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கிய விஷால், சுசீந்திரன் இயக்கத்தில் அந்த படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் விஷால் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள போன்ற வெற்றி படங்களை தயாரித்து கோலிவுட்டில் ஒரு வெற்றி பெற்ற நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உலா வருகிறார்.

விஷாலுக்கு நடிப்பு மட்டுமின்றி பொது சேவையிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. திருட்டு விசிடியை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்த நடிகர் இவர் ஒருவர் மட்டுமே. காவல்துறையினர்களின் உதவியோடு இவரே நேராக திருட்டு விசிடி விற்பனை செய்த கடைகளுக்கு சென்று ரெய்டு நடத்தி திருட்டு விசிடி தயாரிப்பவர்களை கதிகலங்க வைத்தார்.

விஷாலின் துணிச்சலான போக்கை உணர்ந்த இளையதலைமுறை நடிகர்கள் அவருடைய தலைமையின் கீழ் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றனர். கிரிக்கெட் கேப்டனாக மட்டுமின்றி இளம்தலைமுறை நடிகர்களின் மனதிலும் கேப்டனாக மாறினார். சக நடிகர், நடிகைகள் பிரச்சனையில் சிக்கியிருந்தால் உடனே அந்த பிரச்சனைகளை தீர்க்க களம் இறங்குபவர்களில் முதல் ஆளாக இருந்தார் விஷால்

துடிப்பு, துணிச்சல், அநியாயத்தை தட்டி கேட்கும் தைரியம் இவற்றால் தற்போது இவருடைய தலைமையின் கீழ் ஒரு அணியே உருவாகி அந்த அணி விரைவில் நடைபெறவிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை சந்திக்க உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பிரபல நடிகர்கள் பலர் விஷால் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் வரும் தேர்தலில் இவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொறுப்புகளை கைப்பற்றி விஜயகாந்துக்கு பின்னர் ஒரு திறமையான நிர்வாகத்தை விஷால் கொடுப்பார் என்றே பல முன்னணி நடிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்றைய பிறந்த நாளில் இன்னும் பல சாதனைகள் விஷால் பெற நாம் மீண்டும் ஒருமுறை மனதார அவரை வாழ்த்துகிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.