close
Choose your channels
Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla Review
Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla Review
Cast:
Karthik, Sharia, Jagdeesh
Direction:
Dinesh Selvaraj
Movie:
Naalu Perukku Nalladhuna Edhuvum Thapilla
Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla
IndiaGlitz [Thursday, March 30, 2017 • தமிழ்] Comments

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனர்களாக மதிக்கப்படும் மணி ரத்னம், பாரதிராஜா ஆகிய இருவரின் பல படங்களுக்கு கதை எழுதியவரான ஆர்.செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ், இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’.  படத்தின் விளம்பரங்களில் மணி ரத்னம், பாரதிராஜா இருவரின் பெயரும் இடம்பெற்றிருப்பது படத்துக்கான அறிமுக கவனத்தைத் தந்தது. படத்தின் கதையை செல்வராஜும் இயக்குனருடன் சேர்ந்து எழுதியிருக்கிறார்.  படம் இந்த மூன்று ஜாம்பவான்களின் பெயருக்கு புகழ் சேர்க்குமா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியின் மகன் பிரபு (பிரபு) சாலைவிபத்தில் தன் அண்ணனை இழக்கிறான். அப்பாவின் நேர்மையும் எளிமையும் கலந்த வாழ்க்கைமுறையை விரும்பாத பிரபு, மலேசியாவுக்குச் செல்ல குறுக்கு வழியில் பெரும் பணம் ஈட்ட விரும்புகிறார்.  பிரபுவின் அண்ணனுடைய நண்பர்கள்  அனில் (கார்த்திகேயன்), ஸ்ரீதர் (இவன்ஸ்ரீ) மற்றும் ஜானி (ஜெகதீஸ்) ஆகியோர் திருட்டு, கொள்ளை என அனைத்து தவறான வழிகளிலும் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் பிரபுவையும் தங்கள் கூட்டாளியாக சேர்த்துக்கொள்கிறார்கள்.

ஒரு நாள் நால்வரும் சேர்ந்து கொள்ளையடிக்கு ரூ.5 லட்சம் பிரபுவிடம் இருக்கையில் தொலைந்துவிடுகிறது. இதனால் கோபமடையும் மற்ற மூவரும், ஒரு வாரத்துக்குள் பணத்தைத் திருப்பி ஒப்படைக்கவில்லை என்றால் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று பிரபுவை மிரட்டுகிறார்கள்.

அவர்களுக்கு பயந்து வீட்டில் ஒடுங்கியிருக்கும் பிரபு ஒரு கட்டத்தில் தனது அப்பாவுக்கும் ஒரு பெரும் கோடீஸ்வருருக்குமான நட்பைப் பயன்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு திட்டத்துடன் மற்ற மூவரையும் சந்திக்கிறான். அவர்களும் இதற்கு உடன்பட்டு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்குகிறார்கள்.

பணம் கிடைத்ததா? பிரபு தப்பித்தானா? மற்ற மூவருக்கும் என்ன ஆனது? இவையெல்லாம் மீதிப் படத்தில் சொல்லப்பட்டுள்ளன.

ஒரு வலுவில்லாத சாமான்யன் வலுமிக்க கொள்ளையர்கள் குழுவால் பாதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து மீண்டு அவர்களை எப்படி வெல்கிறான்  என்ற சிறப்பான கதைக் கருவை வைத்து ஒரு பரபரப்பான க்ரைம்  த்ரில்லர் படம் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் மோசமான திரைக்கதை, வலுவற்ற பாத்திரப்படைப்புகள் மற்றும் சுமாருக்கும் கீழான நடிப்பு ஆகியவற்றால் முயற்சியில் தோற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தில் கிளைமேக்ஸில் வரும் திருப்பத்தைத் தவிர வேறெதுவும் சுவாரஸ்யமாக இல்லை. அதற்கு முன்னால் வரும் திருப்பங்கள் அனைத்தும் முன்பே ஊகிக்கக் கூடியவையாக உள்ளன. நிகழ்வுகள் பெரும்பாலும் தற்செயலானவையாகவும் திரைக்கதையாசிரியரின் வசதிக்கேற்றவையாகவும் உள்ளன. காட்சிகள் எதிலும் நம்பகத்தனமை இல்லை. லாஜிக் ரீதியான கேள்விகளு விடையின்றி நிற்கின்றன.

படத்தின் ஆகப் பெரிய பலம் தலைப்பை நியாயப்படுத்தும் கிளைமேக்ஸ் மட்டும்தான். அதைத் தவிர ஆங்காங்கே ஒரு சில காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. உதாரணமாக இரண்டாம் பாதியில் வரும் அந்த முதியோர் இல்லக் காட்சியும் அதற்கு முந்தைய காட்சியும் மனதைத் தொடுகின்றன. படத்தில் பெண் பாத்திரங்களே இல்லை. ஒரே ஒரு ஃப்ரேமில் கூட பெண்கள் யாரும் இடம்பெறவில்லை. பாடல்கள் இல்லை, மையக் கதையிலிருந்து நகரக்கூடிய எந்த ஒரு விஷயமும் இல்லை. ஆனால்  சொத சொத திரைக்கதையால் இந்த புதுமையான முயற்சிகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதுபோன்ற ஒரு படத்தில் மையப் பாத்திரத்துக்கு ஏற்படும் பாதிப்பு பார்வையாளரையும் தொற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தில் அது நிகழவே இல்லை. இதற்கு பிரபுவின் நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அவர் பதற்றப்படுவதும் அழுதுகொண்டே இருப்பதும் மிக செயற்கையாக இருக்கிறது.  கொள்ளையர்கள் மூவரில் கார்த்திகேயனின் நடிப்பு பாராட்டத்தக்கதாக உள்ளது. மற்ற இருவரும் சுமாரான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

நேர்மையான காவலராக வரும் அருள் ஜோதி தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இந்தக் கொள்ளையர்கள் தங்கள் திட்டத்துக்குப் பயன்படுத்தும் மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைககரராக வரும் ஜார்ஜ் விஜய் மனதில் பதியும் நடிப்பைத் தந்திருக்கிறார்.  ஒரு சில இடங்களில் பார்வையாளர்களின் இரக்கத்தை வரவைக்கிறார்.

நவீன் . பியோன் சரோ இருவரும் பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.  பல படங்களில் கேட்ட இசைத் துணுக்குகளையே மீண்டும் கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஏ.டி.பகத் சிங்கின் இயற்கையான ஒளியைக் கொண்டு படம்பிடித்திருக்கிறார். பணம் தொடர்பான குற்றங்கள் நடக்கும் காட்சிகளில் புத்திசாலித்தனமாக சிசிடிவி கேமரா பதிவுகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.  படத்தொகுப்பாளர் சேவியர் திலக்  ஒழுங்கில்லாத ஷாட்களை ஒருங்கிணைத்து படமாகத் தருவதில் பாராட்டத்தக்க பணியை செய்திருக்கிறார். ஆனால்  காட்சிகளுக்கு பரபரப்பையும் வேகத்தையும் கூட்டும் நோக்கில்  ஜெர்க் கட்களையும் ஃப்ரீஸ் ஷாட்களையும் மிக அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது கண்களை உறுத்துகிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல கதைக்கருவை சொதப்பலான திரைக்கதையால் வீணடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் குறைகளை சரிசெய்துகொண்டு அடுத்த படத்தை நிறைவாக அளிக்க வாழ்த்துகள்.

Rating: 1.5 / 5.0

Watched Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla? Post your rating and comments below.

X