சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Friday, February 17, 2017 • தமிழ் Comments

தொலைக்காட்சியில் இருந்து திரையுலகிற்கு வந்து ஐந்தே வருடங்களில் பத்தே படங்களில் மட்டும் நடித்து ஒரு நடிகர் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிட்டார் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் தனது அயராத உழைப்பு, விடா முயற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மூலம் இந்த சாதனையை செய்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோதே தமிழக மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டியராஜின் 'மெரினா' படம் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது முத்திரை நடிப்பை வெளிபடுத்திய சிவகார்த்திகேயன், அடுத்து தனுஷூக்கு நண்பராக '3' படத்தில் தோன்றினார். பின்னர் 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்த படம் 'எதிர்நீச்சல்'. இந்த படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு நெருங்க வழிவகை செய்தது.

பின்னர் 'மான் கராத்தே', 'காக்கி சட்டை' படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு 'ரஜினி முருகன்' படம் முன்னணி நடிகர்களின் பட்டியலை அவரை இணைத்தது மட்டுமின்றி வசூல் மன்னன் பட்டியலிலும் இடம்பிடித்தார். இந்த படத்திற்கு பின்னர் அவருடைய மார்க்கெட் மின்னல் வேகத்தில் எகிறியது என்று கூறலாம்.


பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த 'ரெமோ' படமும் வசூல் அளவில் வெற்றி பெற்றதோடு ரசிகர்களின் மாபெரும் பாராட்டுக்களையும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. இந்த படம் பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இணையாக நல்ல ஓப்பனிங் கொடுத்ததால் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகிஸ்தர்களும் நல்ல லாபம் பெற்றனர். இதனால் அடுத்து வரும் சிவகார்த்திகேயன் படங்களின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உயரத்தை எட்டக்கூடிய திறமையும், அதிர்ஷ்டத்தையும் ஒருங்கே பெற்ற சிவகார்த்திகேயன், பல விருதுகளையும் புகழையும் பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க நமது வாழ்த்துக்கள்.

 

 

More News