close
Choose your channels

Sangili Bungili Kadhava Thorae Review

Review by IndiaGlitz [ Friday, May 19, 2017 • தமிழ் ]
Sangili Bungili Kadhava Thorae Review
Banner:
Foxstar India
Cast:
Jiiva Sri Divya, Radhika Sarathkumar, Soori, Ilavarasu, Mottai Rajendran, Thambi Ramaiah, Devadarshini, and Kovai Sarala.
Direction:
Ike
Production:
Atlee
Music:
Vishal Chandrasekhar

தமிழ் சினிமாவில் ஹாரர் காமடிப் படங்களே அதிகமாக வருவதாகவும் மற்ற ஜானர் படங்கள் குறைந்துவருவதாகவும் ரசிகர்களும் விமர்சகர்களும் குறைபட்டுக்கொள்ளும் நிலை உள்ளது. ஆனால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் முழுதாகத் திருப்திபடுத்தும் ஹாரர்-காமடிப் படங்களும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. அறிமுக இயக்குனர் ஐக் எழுதி இயக்கியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ அப்படி ஒரு படம்தான். மேலும் தெரிந்துகொள்ள  விரிவான விமர்சனத்தைப் படிக்கவும்.

வாசு ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கர். பொய்க் கதைகள் சொல்லி ஏமாற்றியாவது வீடுகளை விற்றுத்தருவதில் கில்லாடி. அவனது அம்மாவின் (ராதிகா) ஆசைப்படி தானும் ஒரு சொந்த வீடு வாங்குவதே அவனது வாழ்நாள் லட்சியம்.

பேய் வசிப்பதாக நம்பப்படும் ஒரு பங்களாவை குறைந்த விலைக்கு வாங்குகிறான். அவனது அம்மா, மாமா (இளவரசன்) மற்றும் அவரது குடும்பத்தினர். அவனது மாமன் மகளைக் காதலிக்கும் நண்பன் சூரணம்(சூரி) ஆகியோருடன் புது வீட்டில் குடியேறுகிறான்.இவர்கள் குடியேறிய அதே நாளில் ஜம்புலிங்கம் (தம்பி ராமையா) என்பவன் அவனது குடும்பத்துடன் அந்த விடு தனக்குதான் சொந்தம் என்று குடியேறுகிறான். இரண்டு குடும்பங்களும் ஒரே வீட்டில் வசிக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. ஜம்புலிங்கத்தின் மகள் ஸ்வேதா (ஸ்ரீதிவ்யா) வாசுவுக்கு முன்பே அறிமுகமானவள். இருவரும் காதலிக்கின்றனர்.

ஜம்புலிங்கம் குடும்பத்தை விரட்ட வாசுவும் சூரணமும் அந்த வீட்டில் பேய் இருப்பது போன்ற சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களை பயமுறுத்துகிறார்கள். ஆனால் அங்கு உண்மையிலேயே பேய் இருக்கிறது.

இடையில் ஏற்படும் சில விபரீதங்களால் வாசுவின் குடும்பமும் காதலியும் அவனை விட்டுப் பிரியும் நிலை ஏற்படுகிறது. பேய் இருப்பதால் அந்த வீடும் வாசுவின் கையைவிட்டுப் போய்விடக்கூடிய நிலை ஏற்படுகிறது.

 பேயின் முன்கதையை தெரிந்துகொண்டு அதை வீட்டைவிட்டு நீங்கவைத்து தன் வீட்டையும் குடும்பத்தையும் காதலையும் வாசு எப்படி மீட்கிறான் என்பதே மீதிக் கதை.

 ஹாரர், காமடி என இரண்டு விஷயங்களிலும் சமமாக திருப்திபடுத்தும் படத்தைத் தந்திருக்கிறார் ஐக். அதோடு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற செய்தியை பிரச்சார தொனியும் இல்லாமல் மெலோட்ராமாதன்மையும் இல்லாமல் அழகாகப் பொருதியிருக்கிறார். 

அனைத்து நடிகர்களும் காமடிக்கு சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக  படம் முழுக்க வரும் சூரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் ரசித்து சிரிக்க வைத்திருக்கிறார். தம்பி ராமையா, அவரது மனைவியாக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் அவருக்கு நன்கு ஈடுகொடுத்துள்ளனர்.  கொஞ்சம் இரட்டை அர்த்தக் காமடிகளும் உண்டு. நல்லவேளை படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார் போர்ட்.

ஹாரர் காட்சிகள் பயமுறுத்தும் அளவுக்கு இல்லை என்றாலும் அவற்றில் பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் இருப்பதால அவற்றை ரசிக்க முடிகிறது.  பேய் வரும் காட்சிகள் அனைத்தும் புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளன.  படம் முழுக்க ஒன்றைக் காட்டிவிட்டு பிறகு அது வேறோன்று என்று சொல்லி ரசிகர்களின் ஊகத்தைப் பொய்யாக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை உத்தியை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஐக்.

குறைகள் இல்லாமல் இல்லை. ஆரம்ப கட்டக் காட்சிகளுடன் ஒட்டவே முடியவில்லை. முதல் பாதியில் ஒருகட்டத்துக்கு மேல் சூடுபிடிக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் தொய்வடையத் தொடங்குகிறது. ஆனால் கடைசி இருபது நிமிடக் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. பேய்க்கான ஃப்ளேஷ்பேக்கில் குடும்ப உறவுகளின் மேன்மை என்ற நல்ல விஷயம் சொல்லப்பட்டிருந்தாலும் அதற்குமேல் ஒன்றுமில்லை. பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம்.   இரண்டாம் பாதியின் நீளத்தையும் சற்றுக் குறைத்திருக்கலாம்.

ஆனால் இந்தக் குறைகளையெல்லாம் மீறி புதுமையான ஹாரர் காட்சிகள், ரசித்து சிரிக்கவைக்கும் காமடிக் காட்சிகள் என்று முழுத் திருபதி தருகிறது ‘சங்கிலி புங்கிலி கதவ தொற'.

ஜீவா பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை குறைவைக்காமல் தந்திருக்கிறார். ஆனால் வீட்டில் தனியாக நின்று பேய்க்கு சவால் விடும் காட்சி மட்டுமே அவருக்குள் இருக்கும் திறமையான நடிகருக்கு தீனி போடுகிறது. ஸ்ரீதிவ்யாவுக்கு சில காட்சிகளில் அதிக மேக்கப் துறுத்திக்கொண்டி தெரிகிறது. மற்ற காட்சிகளில அழகாக இருக்கிறார். பாத்திரத்துக்குப் பொருந்துகிறார்.

சூரி காமடியில் அதகளம் செய்திருக்கிறார். தம்பி ராமையா தேவதர்ஷினி ஆகியோரும் நன்கு சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா தன் பங்குக்கு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி ஆகியோரும் காமடிக்குக் கைகொடுத்திருக்கின்றனர்.

ராதிகா, இளவரசு ஆகியோர் வழக்கம்போல் முதிர்ச்சியான நடிப்பைத் தந்துள்ளனர். ராதாரவி ஒரு கண்ணியமான வேடத்தில் அழகாகப் பொருந்துகிறார்.  ஜெய், அக்‌ஷரா கவுடா கெளரவத் தோற்றத்தில் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன.

விஷால் சந்திரசேகரின் இசையில் பிரேம்ஜி அமரன் பாடியிருக்கும் தீம் பாடல் மட்டும் மனதில் பதிகிறது. பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக உள்ளது. சத்தியன் சூரியனின் ஒளிப்பதி படத்துக்குத் தேவையானதை சரியாகத் தருகிறது.
 
இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் இயக்குனர் அட்லி, ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உதவும் அளவு இந்தப் படம் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.

Rating: 2.75 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE