close
Choose your channels

பாலக்காட்டு மாதவன். திரைவிமர்சனம்

Saturday, July 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம், வடிவேலு வரிசையில் மீண்டும் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கின்றார் விவேக். ஹீரோவாக நடித்தாலும் தன்னுடைய டிரேட் மார்க் காமெடியுடன் அம்மா செண்டிமெண்டையும் கலந்து கொடுத்துள்ள படம்தான் 'பாலக்காட்டு மாதவன்'. ஒரு பெரிய மெசேஜை நகைச்சுவை மருந்து கலந்து கொடுத்துள்ள விவேக்கின் முயற்சி வெற்றி பெருமா? என்பதை தற்போது பார்ப்போம்.

இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவி சோனியா அகர்வால் என அளவான குடும்பமாக வாழ்ந்து வரும் நடுத்தரவர்க்க குடும்பம் விவேக்கின் குடும்பம். விவேக்கும், சோனியா அகர்வாலும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் விவேக்கை விட சோனியா அகர்வாலுக்கு சம்பளம் அதிகம். இதனால் ஈகோ பிரச்சனை எழ, மனைவியை விட அதிகம் சம்பாதித்து காட்டுகிறேன் என்று வீறாப்பாக வசனம் பேசி வேலையை விடுகிறார் விவேக். ஆனால் அதன்பின்னர்தான் தெரிகிறது அடுத்த வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று.

டிரைவர், அமைச்சரின் பி.ஏல், எம்.எல்.எம் பிசினஸ் என பல வேலைகள் பார்க்கும் விவேக்கிற்கு எதுவும் செட் ஆகவில்லை. கடைசியில் மூன்று மகன்களால் கைவிடப்பட்ட ஒரு வயதான பெண்மணியை கவனித்து கொண்டால், மாதம் ரூ.25,000 வருமானம் வரும், அதுமட்டுமின்றி அந்த பெண் வைத்திருக்கும் ஒரு பெரிய தொகையும் தனக்கு கிடைக்கும் என்ற ஆசையில் வயதான செம்மீன் ஷீலாவை தத்தெடுத்து தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

ஆனால் சாப்பாட்டு ராமனாக இருக்கும் ஷீலாவுக்கு செய்யும் செலவு, அவரால் வரும் வருமானத்தை விட அதிகம் என்பது ஒரு மாதம் கழித்து விவேக்கிற்கு புரிகிறது. இதனால் மீண்டும் விவேக்கிற்கும் சோனியா அகர்வாலுக்கும் பிரச்சனை வருகிறது. இறுதியில் ஷீலாவை வேறு இடத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடுவது என்று விவேக் முடிவு எடுக்கின்றார். ஆனால் இந்த ஒரு மாத காலத்தில் ஷீலா காட்டிய தாய்ப்பாசம் தடுக்கின்றது. பிள்ளைகளும் பாட்டியை பிரிய முடியாது என்கின்றனர். இறுதியில் ஷீலாவை விவேக் என்ன செய்தார்? என்பதை கடைசி 15 நிமிடங்களில் செண்டிமெண்ட்டுடன் சொல்லி முடித்திருக்கின்றார் இயக்குனர் சந்திரமோஹன்.

படத்தில் கடைசி 15 நிமிடங்கள் தவிர முழுக்க முழுக்க நகைச்சுவைதான். விவேக் தன் பாணியில் நகைச்சுவையுடன் ஆங்காங்கே சமூகத்திற்கு தேவையான கருத்துக்களையும் நுழைத்துள்ளார். மனைவி சோனியா அகர்வாலிடம் வீறாப்பாக பேசி வேலையை விட்டுவிட்டு அமைச்சரின் பி.ஏ.வாக சேரும் விவேக், அங்கு அமைச்சருக்கு உணவு கொடுக்கும் முன்னர் விவேக்கை சாப்பிட சொல்லிவிட்டு விஷம் இருக்கின்றதா? என்று டெஸ்ட் பார்க்கும் வேலை என்று தெரிந்தவுடன் விவேக் அதிரும்போது தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கின்றது. இமான் அண்ணாச்சியுடன் சேர்ந்து எம்.எல்.எம். பிசினஸ், தொழிலதிபர் போல் நடிக்கும் சிங்கமுத்துவுடன் அடிக்கும் லூட்டி, மற்றும் நான் கடவுள்' ராஜேந்திரனை கலாய்ப்பது, செல்முருகனுடன் சேர்ந்து கொண்டு செய்யும் சேட்டை என படம் முழுவதும் தனது நகைச்சுவை திறனை கொட்டி தீர்க்கும் விவேக், கடைசி பதினைந்து நிமிடங்களில் தனக்கு செண்டிமெண்டும் வரும் என்பதை உறுதி செய்ததோடு அனைவரின் கண்களையும் குளமாக்கிவிடுகின்றார்.

இதுவரை கவர்ச்சியான வேடங்களில் மட்டும் கலக்கி வந்த சோனியா அகர்வால், இந்த படத்தில் ஒரு குடும்ப பெண்ணாகவே மாறியுள்ளார். பொறுப்பின்றி இன்றி இருக்கும் கணவன் விவேக்கை திருத்த அவர் செய்யும் முயற்சிகள், குழந்தைகளிடம் பாசமாக நடந்து கொள்ளும் பக்குவம் என கனமான வேடத்தை பொருத்தமாக செய்துள்ளார்.

பிரபல மலையாள நடிகையான ஷீலா, பிரேம்நசீருடன் மட்டும் 100 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர், அதுமட்டுமின்றி தேசிய விருதும் பெற்றவர். இவருக்கு இதெல்லாம் ஒரு வேடமே இல்லையென்பது போல் அசால்ட்டாக ஊதித்தள்ளுகிறார். மூன்று பையன்களும் தன்னை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் கொண்டு சென்று விடுவதும் பின்னர் மீண்டும் தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க பாசம் உள்ளது போல் நடிக்கும் பிள்ளைகளை கண்டு ஏமாறுவதும், விவேக் வீட்டிற்கு வந்த பின்னர் அடிக்கும் கொட்டமும், சோனியா அகர்வாலிடம் மாமியார் பாணியை காட்டுவதும், விவேக்கின் குழந்தைகளிடம் அன்புமழை பொழிவதும் என அவருடைய வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

நான்கடவுள் ராஜேந்திரன் படத்திற்கு படம் தனது காமெடி நடிப்பை மெருகேற்றி கொண்டே போகிறார். சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி, செல்முருகன், என ஒரு காமெடி கூட்டமே இருப்பதால் படத்தில் ஒரு காட்சியில் கூட நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அனிருத் பாடியுள்ள 'உச்சிமேலே' என்ற பாடல் கேட்கும்படி உள்ளது. மற்ற பாடல் சுமார்தான் என்றாலும் நகைச்சுவை படத்திற்கே உரிய பின்னணி இசையை கொடுக்க தவறவில்லை. செல்வராஜின் ஒளிப்பதிவு, ராஜகோபாலின் எடிட்டிங் ஆகியவை ஓகே ரகம்.

ஒரு நல்ல குடும்பக்கதையை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்துள்ள இயக்குனர் சந்திரமோஹன், இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். சில சமயங்களில் நாடகம் பார்க்கும் உணர்வு வருகின்றது. ஆனாலும் ஒரு குடும்பத்திற்கு பணத்தை விட பெரியவர்களின் அன்பு முக்கியமானது என்றும், குடும்பத்தில் உள்ள பெரியவர்களை சிறியவர்கள் மதிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நல்ல மெசேஜை சொல்ல இயக்குனர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.

மொத்தத்தில் 'பாலக்காட்டு மாதவன்' ஒரு சிரிப்பு பல்கலைக்கழகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.