close
Choose your channels

அஜித்தின் 46வது பிறந்த நாள்: 46 அபூர்வ தகவல்கள்

Saturday, April 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்! இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் சக்தி அளப்பறியது. இவர் நடிப்பில் ஒரு கமல் இல்லை, ஸ்டைலில் ஒரு ரஜினி இல்லை, டான்சில் ஒரு பிரபுதேவா இல்லை, அழகில் ஒரு அரவிந்தசாமி இல்லை, ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஒரு இனங்காணமுடியாத ஒரு ஈர்ப்பு இவரிடத்தில் உண்டு. அஜித்தின் நடிப்பை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட அவருடைய மனித நேயத்தை கண்டு வியப்பார்கள். முழுக்க முழுக்க பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்ட ஒரு நடிகர், மற்றவர்களுக்கு இடது கை உதவி செய்வது வலது கைக்கு தெரியாத வகையில் பார்த்து கொள்வதில் ஒரு கர்ணன், ரசிகர்களை தனது சொந்த விருப்பத்திற்கு பயன்படுத்தாமல் நற்பணி மன்றங்களை கலைக்கும் அளவுக்கு துணிச்சல் உள்ளவர், மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் பேசும் தன்மை கொண்டவர் என அஜித் குறித்து அடுக்கி கொண்டே போகலாம்.

இத்தகைய நற்பண்புகள் கொண்ட அஜித், இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவர் குறித்த 46 தகவல்களை பார்ப்போம்

1. தமிழில் அஜித் அறிமுகமான முதல் படம் 'அமராவதி'. யாருடைய பின்புலமும் இன்றி தனது சொந்த முயற்சியால் திரையுலகில் காலடி எடுத்து வைத்த மிகச்சிலரில் ஒருவர்

2. வசந்த் இயக்கிய 'ஆசை' திரைப்படம் தான் அஜித்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இந்த படத்தை தயாரித்தவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

3. அஜித் நடித்த படங்களில் முதல் சூப்பர் ஹிட் பெற்ற படம் 'காதல் கோட்டை' இந்த படத்தை இயக்கிய அகத்தியன் தேசிய விருது பெற்ற முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.

4. இளையதளபதி விஜய்யுடன் அஜித் நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. இந்த படத்தில் அஜித்தும் விஜய்யும் நண்பர்களாக நடித்திருந்தார்கள். இன்றளவும் இருவரும் உண்மையான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5. சரண் இயக்கிய 'அமர்க்களம்' படப்பிடிப்பின்போதுதான் ஷாலினியுடன் அஜித்துக்கு காதல் உண்டானது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் அஜித் திருமணம் கடந்த 2000ஆம் ஆண்டு நடந்தது.

6. அஜித்தின் திருமண நாளும் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாளும் ஒன்று. இரண்டுமே ஏப்ரல் 24ஆம் தேதி

7. நேற்று அறிமுகமான நடிகர்கள் கூட விதவிதமான பட்டங்களுடன் வலம்வரும் நிலையில் தனது பெயருக்கு முன்னாள் இருந்த அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தையும் போட வேண்டாம் என்று நீக்க சொன்னவர் அஜித்.

8. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் அஜித் நடித்த தீனா. இந்த படத்தில் இருந்துதான் அஜித்துக்கு 'தல' என்ற அடைமொழி உருவானது

9. பாலாவின் 'நான் கடவுள்', ஏ.ஆர்.முருகதாஸின் 'கஜினி' போன்ற படங்களில் நடிக்க கமிட் ஆகி பின்னர் அந்த படங்களில் இருந்து ஒருசில காரணங்களால் விலகியவர்

10. மனதில் பட்டதை அப்படியே பொதுமேடையாக இருந்தாலும் பேசிவிடுவார். அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கடந்த சில வருடங்களாக தவிர்த்து வருகிறார்

11. திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ரஜினியை அடுத்து அஜித் தான். அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் முதல் காட்சியில் பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் இருப்பார்கள். குறிப்பாக சிம்புவை அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்று கூறலாம்

12. அஜித்துக்கு ரஜினியை போலவே நெகட்டிவ் ரோல் மிகப்பொருத்தமாக இருக்கும். பில்லா', 'மங்காத்தா' போன்ற படங்கள் இதற்கு உதாரணம்

13. அஜித் ஒரு பைக் மற்றும் கார் பிரியர் என்று கூறலாம். சர்வதேச கார் மற்றும் பைக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

14. விமான பைலட் லைசென்ஸ் வைத்துள்ள ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டுமே

15. அஜித் ஒரு தீவிரமான சாய்பாபா பக்தர். எந்த ஒரு புதுப்பொருள் வாங்கினாலும் சாய்பாபாவுக்கு சமர்ப்பணம் செய்வதை மறக்க மாட்டார்.

16. அரசியலில் இறங்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர் அஜித். ஆனால் அதே நேரத்தில் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை தெரிந்து வைத்திருப்பார்

17. அஜித் அடிக்கடி செல்லும் கோவில் திருப்பதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

18. அஜித் ஒரு புத்தகப்பிரியர். வீட்டில் ஒரு மினி நூலகமே வைத்துள்ளார்.

19. அஜித்துக்கு பிடித்த உணவு சிக்கன் பிரியாணி. ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளில் படக்குழுவினர்களுக்கு தனது கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார்

20. அஜித்துக்கு பிடித்த இன்னொரு விஷயம் போட்டோகிராபி. போட்டோ எடுப்பது மட்டுமின்றி எந்தவித கேமிரா ரிப்பேர் ஆனாலும் அவரே சரிசெய்துவிடுவார்

21. அஜித் தனது படத்தின் வெற்றி தோல்வி குறித்து கவலைப்படவே மாட்டார். நடிப்பதோடு என் வேலை முடிந்துவிட்டது. வெற்றி தோல்வியை இனி ரசிகர்கள் தீர்மானிக்கட்டும் என்ற கொள்கை உடையவர்.

22. கடந்த சில வருடங்களாக தனது படத்தின் புரமோஷனுக்கு வரமாட்டேன் என்ற கண்டிஷனுடன் தான் படத்தில் ஒப்பந்தமாகிறார்.

23. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். ஒருவேளை கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நிகழ்ச்சி முடியும் வரை இருப்பார். இலங்கைக்கு எதிரான நடிகர் சங்க உண்ணாவிரதம், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான உண்ணாவிரதம் இதற்கு உதாரணம்

24. ஷாருக்கானுடன் அஜித் இணைந்து நடித்த ஒரே படம் அசோகா

25. அதேபோல் ஸ்ரீதேவியுடன் அஜித் நடித்த படம் 'இங்கிலிஷ் விங்கிலீஷ்'

26. அஜித்துக்கு அம்மா பாசம் மிக அதிகம். வெளியில் சென்றால் அம்மா படத்தை வணங்கிவிட்டு தான் செல்வார்

27. தன்னிடம் பணிபுரியும் அத்தனை பணியாளர்களுக்கும் சொந்தமாக வீடுகட்டி கொடுத்த ஒரே நடிகர் அஜித் மட்டுமே

28. அஜித்துக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அவர் குடியிருக்கும் தெருவில் அடிக்கடி அவர் சைக்கிள் ரைட் செல்வதை பார்க்கலாம்

29. அஜித் இந்து, ஷாலினி கிறிஸ்துவர். எனினும் அவரது வீட்டில் இருமத கடவுள்களின் படங்களும் இருக்கும். தீபாவளியும், கிறிஸ்துமஸ் திருநாளும் ஒரே மாதிரி கொண்டாடுவார்

30. இமேஜ் குறித்து கவலைப்படமால் உண்மையான தோற்றத்துடன் வெளியே வருவதில் ரஜினிக்கு அடுத்து அஜித் தான்

31. மைத்துனர் ரிச்சர்ட், மைத்துனி ஷாம்லி உள்பட யாருக்கும் யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டார். அவர்களுடைய திறமையில் முன்னேற வேண்டும் என்பதே அவரது கொள்கை

32. மகள் அனோஷ்கா மீது அவருக்கு கொள்ளை பிரியம். எந்த வேலையாக இருந்தாலும் மகள் பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வார்

33. படப்பிடிப்பு இல்லாத நாளில் மகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக இருப்பார்

34. தனக்கு பிடித்தமான சாய்பாபா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்பது அஜித்தின் நீண்ட நாள் ஆசை. இந்த படம் தனது 75வது படமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்துள்ளதாக தகவல்

35. தன்னுடைய நண்பர்களுக்கு ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார். தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் ஹெல்மெட் இல்லாமல் இருந்தால் உடனே தன்னுடைய ஹெல்மெட்டை எடுத்து கொடுத்துவிடுவார்

36. பிரபல நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் மகனான டாக்டர் விஜய்சங்கர் அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்

37. அஜித்துக்கு தெரிந்த இன்னொரு கலை துப்பாக்கி சுடுதல். சுய பாதுகாப்பிற்காக அஜித் துப்பாக்கி வைத்துள்ளாராம்

38. அஜித் பொது இடத்தில் எந்த சலுகையையும் விரும்ப மாட்டார். விமான நிலையம், வாக்குச்சாவடி ஆகியவற்றில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருப்பார்

39. அஜித்துடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் தவம் இருக்கும் நிலையில் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்த ஒரே நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி. அஜித்துடன் ஜோடியாக நடிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு அஜித் எனக்கு அண்ணன் போல அவர் படத்தில் முக்கிய வேடத்தில் வேண்டுமானாலும் நடிப்பேன் ஆனால் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

40. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012வது ஆண்டு பட்டியலில் அஜித் குமாருக்கு 61ஆவது இடம் கிடைத்தது. மேலும் 2014 வது ஆண்டிற்கான இதே பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.

41. 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

42. பிரபலமாக இருக்கும் பெரும்பாலான இயக்குனர்களின் முதல் படம் அஜித் நடித்த படங்கள் தான். சரணின் முதல் படம் 'காதல் மன்னன்'. ஜேடி ஜெர்ரியின் முதல் படம் 'உல்லாசம்'. எஸ்.ஜே சூர்யாவின் முதல் படம் 'வாலி'. ஏ.ஆர். முருகதாஸின் முதல் படம் 'தீனா'. ஏ.எல்.விஜய்யிடன் முதல் படம் 'கிரீடம்'. அதேபோல் ரமேஷ் கண்ணாவின் முதல் படம் 'தொடரும்'. ராஜூ சுந்தரத்தின் முதல் படம் 'ஏகன்'. சிங்கம் புலியின் முதல் படம் 'ரெட்' என்பது குறிப்பிடத்தக்கது.

43. விஜய்யை அடுத்து அஜித்துடன் நடித்த பிரபலங்கள் பலர். அவர்களில் பாசமலர்கள்' படத்தில் அரவிந்த்சாமி, 'கல்லூரி வாசல்' படத்தில் பிரசாந்த், 'உல்லாசம்' படத்தில் விக்ரம், 'பகைவன்' படத்தில் சத்யராஜ், 'நீ வருவாய் படத்தில் பார்த்திபன், 'ஆனந்த பூங்காற்றே', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படங்களில் கார்த்திக், 'தீனா' படத்தில் சுரேஷ் கோபி, 'மங்காத்தா' படத்தில் அர்ஜூன், 'ஆரம்பம்' படத்தில் ஆர்யா, 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய் என பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

44. எம்ஜிஆரால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அதனால்தான் எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்டதோடு, ரசிகர்கள் வழிபடுகின்றனர். மிகப்பெரிய ரசிகர்களை ஈர்ப்பதில் எம்ஜிஆருக்கு அடுத்து அஜித் இருக்கிறார் என்று மறைந்த அரசியல் விமர்சகர் சோ ராமசாமி தெரிவித்திருந்தார்

45. அஜித் நடிகராக மட்டுமில்லை. நல்ல மனிதராக ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதனால் தான் அஜித் படத்தில் பெரிதாய் நடிக்கத் தேவையில்லை, அவர் திரையில் தோன்றினாலே போதும் என்று அவரது ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள்.

46. அஜித்திடம் எனக்குப் பிடித்தது அவர் தன்னம்பிக்கை தான். என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் அவருக்கு மிகப் பெரும் பங்குண்டு. நான் தம்பி என்றால் அவர் அண்ணன் என்று இளையதளபதி விஜய் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.