எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையிலே காத்திருந்த நாய்… நெகிழ்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

துருக்கி நாட்டில் வயதான ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஆம்புலன்ஸ் பின்னாலேயே வந்த அவரது செல்ல நாய்க் குட்டி, அவர் வெளியே வரும் வரை மருத்துவமனை வாயிலிலேயே காத்திருந்த சம்பவம் பார்ப்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

துருக்கி நாட்டின் டிராப்ஜன் எனும் மாகாணத்தில் வசித்து வரும் சிமில் சென்டர்க் எனும் 68 வயது நபர் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வந்துள்ளார். அதன் பெயர் போன்கக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. அந்த ஆம்புலஸில் சிமில் கொண்டு செல்லப்பட்டு பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்னுடைய எஜமானர் சிமிலை, ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்வதை பார்த்த போன்கக் அதன் பின்னாலேயே ஓடிச் சென்று இருக்கிறது. பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையின் வாயிலிலேயே அமர்ந்து இருக்கிறது. இதனைப் பார்த்த சிமிலின் மகள் பலமுறை நாயை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த நாய் மருத்துவமனை வாயிலேயே வந்து நின்று தன்னுடைய எஜமானர் சிமிலுக்காக காத்திருக்க தொடங்கி இருக்கிறது. இப்படியே கடந்த 6 நாளும் மருத்துவமனை வாயிலிலேயே காத்திருக்க தொடங்கிய அந்த நாய் ஒருவழியாக தன்னுடைய எஜமானரைப் பார்த்தும் பூரித்துப்போய் வாலை ஆட்டி ஆட்டி கொஞ்சி இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் நெகிழ்ந்து போய் உள்ளனர்.

நாய் நன்றியுள்ளது என்ற சொலவடையை பலமுறை நாம் கேட்டு இருப்போம். ஆனால் எஜமானருக்காக தொடர்ந்து 6 நாட்கள் மருத்துவமனையிலேயே காத்திருந்த நாய் போன்காக் தன்னுடைய செயலால் ஒரு ஹீரோவாக மாறிவிட்டார்.