சென்னையில் கொரோனா தனிமையில் இருந்தவரின் வீட்டில் 250 சரவன் தங்கம் கொள்ளை!!!

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

 

சென்னையில் திநகர் அடுத்த பாண்டிபஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் நூருல் ஹக்(71). இவர் சமீபத்தில்தான் துபாயில் இருந்து திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பின்பு இவருடைய தொடர்பால் குடும்பத்தில் இருந்த பெரும்பாலானவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதே நேரத்தில் நூருல் ஹக்கின் மனைவியின் உடன்பிறந்த சகோதரி காயல்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார். அவருடன் பேரன் மொய்தீன்(29), முஸ்தபா போன்றோரும் வந்திருக்கின்றனர். கொரோனா பாதித்த குடும்பத்தோடு தங்கியிருந்ததால் மொய்தீனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து குடும்பத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கின்றனர். அப்போது மொய்தீன் அந்த வீட்டில் அதிகபடியான பணம், தங்கம் இருப்பதைக் கவனித்து உள்ளான். எனவே இதை கொள்ளையடித்து விடலாம் என முடிவுசெய்து அவனுடைய நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து இருக்கிறான்.

இதனால் நேற்று மதியம் 8 பேர் கொண்ட கும்பல் நூருல் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறது. அங்குள்ள அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு தங்கம், பணம் எல்லாவற்றையும் தேடி எடுத்து இருக்கின்றனர். இதற்காக அந்தக் கும்பல் கிட்டத்தட்ட 21/2 மணி நேரம் அந்த வீட்டிற்குள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 250 சவரன் தங்கம், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச், 90 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட அந்தக் கும்பல் தப்பிச் செல்ல முயன்றிருக்கிறது.

அப்போது அந்த வீட்டில் ஹோண்டா சிட்டி கார் மற்றும் ஆட்டோ இருப்பதை கவனித்த அந்தக் கும்பல் டிரைவர் அப்பாஸை மிரட்டி ஆட்டோவை ஓட்ட வைத்திருக்கின்றனர். மேலும் சிலர் காரில் ஏறித் தப்பித்த நிலையில் சில கிலோ மீட்டர் சென்றவுடன் ஆட்டோ டிரைவரை அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திரும்பி வந்த அப்பாஸ் பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து இருக்கிறார்.

இந்தப் புகாரை விசாரித்து கொண்டிருந்த போது அதே காவல் நிலையத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பாஸ்க்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் பதறிப்போன காவல் அதிகாரிகள் அப்பாஸை வீட்டித் தனிமைக்கு அனுப்பிவிட்டு அடுத்தக் கட்டமாக தங்களைத் தனிமைப்படுத்தி கொள்ளலாமா என ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Gold robbery at the home of a Corona loner in Chennai