close
Choose your channels

மும்பையைப் பழிதீர்த்து முதல் கோப்பையை வெல்லுமா டெல்லி?

Monday, November 9, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபில் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் அனுபவ வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை இளம் படையான டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்திய ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. துபாயில் நடக்கும் ஃபைனலில் இதுவரை அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை ஒருமுறைகூடக் கோப்பையை வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது.

சமபலம்

இரு அணிகளுமே இந்தத் தொடரின் துவக்கம் முதல் ஒரு சில சறுக்கல்களைத் தவிரச் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன. சொல்லப்போனால், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சமபலமாகவே உள்ளன. ஆனால் ஐபிஎல் அரங்கில் ஃபைனலில் விளையாடிய அனுபவத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணியை விட ஒருபடி மேலே உள்ளது.

இது வரலாறு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி அதிகபட்சமாக 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 12 போட்டிகளில் வென்றுள்ளது. இந்த ஆண்டு இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. அதில் மும்பை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

எழுச்சி தேவை

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவருவதால், கேப்டன் ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவர் இந்த ஆண்டு மொத்தமாக 11 போட்டிகளில் விளையாடி 264 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இன்றைய ஃபைனலில் இவர் எழுச்சி பெறுவது அவசியம். அதேநேரம் இவரைத் தவிர்த்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது மும்பைக்குப் பலம். ஆல்ரவுண்டர் கெய்ரன் போலார்டு ஹர்திக் பாண்டியாவுடன் கைகோர்த்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டிப் பெரும் ஸ்கோரை எட்ட முடியும்.

மறுபுறம் பவுலர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோர் டெல்லி கேபிடல்ஸ் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குத் தொல்லை தரக் காத்திருக்கின்றனர்.

தள்ளாடும் துவக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்கம் என்பது மிகப் பெரிய தடுமாற்றமாகவே உள்ளது எனலாம். ஷிகர் தவன் செட்டாகியிருந்தாலும் அவருடைய பார்ட்னர் சரியாக அமையவில்லை. முதலில் பிரித்வீ ஷா, அடுத்து அஜிங்க்ய ரஹானே எனப் பலர் களமிறங்கியும் பலன் கிடைக்கவில்லை. ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிராக யாரும் எதிர்பாராத விதமாக ஆல் ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கி அசத்தினார். இதனால் ஃபைனல் போட்டியிலும் இவர் துவக்க வீரராகக் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வலிமையான கடைசி நேர பந்துவீச்சைச் சமாளிக்க ஸ்டாய்னிஸ் போன்ற ஆல் ரவுண்டர் கடைசி நேரத்தில் அவசியம் தேவை என்பதில் சந்தேமே இல்லை. இவரை டெல்லி அணி எங்கு எப்படிப் பயன்படுத்தவுள்ளது என்பது ஆட்டத்தின் போக்கையே மாற்ற வாய்ப்புள்ளது. ரிஷப் பந்த் 6 அல்லது 7ஆம் இடத்தில் இறங்கி அதிரடி காட்ட முயற்சி செய்யலாம்.

கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுப்பதைத் தவிர்த்து நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுச் செயல்பட வேண்டும். பவுலர்களான காகிசோ ரபடா, ஆன்ரிக் நோர்க்கியா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் டாப் ஆர்டர் வீரர்களை விரைவாக அவுட்டாக்கினால் அது டெல்லிக்குச் சாதகமாக அமையும்.

தனிநபர் சாதனைகள்

அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷிகர் தவன் (603 ரன்கள்), ஷ்ரேயஸ் ஐயர் (454 ரன்கள்), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் (352 ரன்கள்) ஆகியோரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் (483 ரன்கள்), குயின்டன் டி காக் (483 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (461 ரன்கள்) ஆகியோரும் உள்ளனர்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டெல்லியின் ரபடா (29 விக்கெட்), நோர்க்கியா (20 விக்கெட்), ரவிச்சந்திரன் அஸ்வின் (13 விக்கெட்) ஆகியோரும், மும்பையின் ஐஸ்பிரீத் பும்ரா (27 விக்கெட்), டிரென்ட் போல்ட் (22 விக்கெட்), ராகுல் சாஹர் (15 விக்கெட்) ஆகியோரும் உள்ளனர்.

யாருக்கு வாய்ப்பு?

இப்படி இந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட வீரர்கள் இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ளபோதும் இதுவரையிலுமான போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த ஃபைனலில் வெல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 60 சதவீதமும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 40 சதவீதமும் வாய்ப்பு உள்ளது என்று சொல்லலாம்.

ஆடுகளம் எப்படி?

ஃபைனல் போட்டி நடக்கவுள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் இதுவரை மொத்தமாக 61 போட்டிகள் நடந்துள்ளன.

முதலில் பேட்டிங் செய்த அணி 34 முறையும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 26 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி ஸ்கோர் 144.

இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 211; குறைந்தபட்ச ஸ்கோர் 71.

வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் 183.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாகச் செயல்படும்.

ஐந்தாவது கோப்பை?

ஐபிஎல் அரங்கில் ஆறாவது முறையாக ஃபைனலுக்குள் நுழைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்று தனது சாதனைப் பயணத்தைத் தொடர முயற்சிக்கும். மறுபுறம் டெல்லி அணி தனது 13 ஆண்டு காலக் காத்திருப்பை அர்த்தமுள்ளதாக்க விரும்பும் காத்திருக்கும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

உத்தேச லெவன் அணி

மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கெய்ரன் போலார்டு, க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா, ராகுல் சாஹர்.

டெல்லி கேபிடல்ஸ்: அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மயர், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், காகிசோ ரபடா, ஆன்ரிக் நோர்க்கியா, பிரவீண் துபே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.