கிரண்பேடியின் டுவீட்டுக்கு பாராட்டும் கண்டனமும் தெரிவித்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2019]

புதுவை கவர்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அம்மாநில முதல்வருக்கு குடைச்சல் கொடுத்து வரும் கிரண்பேடி தற்போது மாநில எல்லை தாண்டி தமிழக அரசியல், தமிழக மக்கள் குறித்தும் ஒரு சர்ச்சைக்குரிய டுவீட்டை நேற்று பதிவு செய்தார். இந்த டுவிட்டுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். ஆளும் அதிமுகவும் கிரண்பேடிக்கு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தது. இப்படி ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் டென்ஷாக்கும் வகையில் கிரண்பேடி அப்படி என்னதான் டுவீட் செய்தார்?

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த கிரண்பேடி, மோசமான அரசின் செயல்பாடு, ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு, துணிவற்ற மக்கள், அவர்களின் கோழைத்தனமும் சுயநலமும் தான் தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம்'' என்று தனது டுவிட்டரில் கிரண்பேடி தெரிவித்தார்.

இந்த டுவீட்டுக்கு ஒருபக்கம் ஆதரவையும் இன்னொரு பக்கம் கண்டனத்தையு தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி. அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

கிரண்பேடி நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுபுட்டாங்க.. அவங்க சொன்னது புதுசுமில்லை, பொய்யுமில்லை. நாம நமக்குள்ள தினமும் புலம்புறதுதான். உண்மையை போட்டு உடைச்சிட்டாங்களென்ற கோவத்தைவிட உள்ளூர் மானத்தை ஊரான் கப்பல்ல ஏத்திட்டாங்கன்ற அவமானம்தான் இப்போ எல்லாருக்கும் என்று மறைமுகமாக பாராட்டிய கஸ்தூரி அதன்பின்னர், 'ஆனா ஒண்ணு, சுயநலமிக்க, சக்தியில்லாத மக்கள்னு ஒட்டுமொத்தமா தமிழர்களை சொல்லக்கூடாது. ஒருவேளை அவங்களுக்கு தெரிஞ்ச தமிழ் ஆளுங்க அப்பிடித்தான் போலருக்கு. எவ்வளவோ கஷ்டத்துலையும் மனிதாபிமானத்தை விட்டு கொடுக்காத மக்களைத்தான் நான் நெறைய பாத்துருக்கேன். நரி வலம் போனா என்ன, இடம் போனா என்ன, நமக்கெதுக்கு வம்புன்னு காலம் காலமா கண்ணை மூடிக்கிட்டு இருக்கிற நம்ம பாழாப்போன சகிப்புத்தன்மையை சுயநலம்னும் பொறுமையை பலவீனம்னும் அவங்க தவறா மதிப்பிட்டுருக்காங்கன்னு தோணுது. எதிரிக்குகூட மரியாதை குடுத்து பேசறது தமிழர் நாகரிகம். அதற்கு பெயர் பண்பு; பயமில்லை. என்று பதிவு செய்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கஸ்தூரியின் இந்த கருத்துக்கு ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.