யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. அவற்றில் மதுக்கடைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக கேரளாவில் மது அருந்துபவர்கள் மிக அதிகம் என்பதும் மதுவுக்கு அடிமையானவர்கள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மது குடிக்க முடியாமல் 7 பேர் வரை கேரளாவில் தற்கொலை செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து மருத்துவரின் பரிந்துரை சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் மது குடிக்காமல் இருக்க முடியாத இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டிலேயே சாராயம் காய்ச்சிய தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் 37 வயது சந்திரலால் என்பதும் அவர் கேரள மாநிலத்தில் பூஜாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த ஒரு லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது ‘சாராயம் காய்ச்சுவது எப்படி என்பது குறித்து யூடியூப் வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் சாராயம் காய்ச்சுவதற்காகவே தன்னுடைய வீட்டில் உள்ள மனைவி குழந்தைகளை மூன்று நாட்களுக்கு முன்னரே அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் கூறினார். மது போதைக்கு அடிமையாகி சொந்தமாக சாராயம் காய்ச்சும் அளவுக்கு போன அந்த இளைஞரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது