இறந்ததாகக் கூறி உயிரோடிருந்த அண்ணனை, தம்பியே ஃப்ரீசர் பெட்டியில் அஞ்சலிக்காக வைத்த சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,October 14 2020]

சேலம் பகுதியில் உயிரிழந்ததாகக் கூறி முதியவரை அவரது தம்பியே ஃப்ரீசர் பெட்டியில் அஞ்சலிக்காக வைத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கந்தம்பட்டி பகுதியில் வசித்து வந்த முதியவர் பாலசுப்பிரமணிய குமார். இவர் உயிரிழந்து விட்டதாக அவரது தம்பி சரவணன் அனைத்து உறவினர்களுக்கும் தகவல் சொல்லி விட்டு இருக்கிறார்.

இதையடுத்து நேற்றுக் காலையில், குளிர்சாதனப் பெட்டியை வாடகைக்கு வைக்கும் பணியாளர்களை அழைத்து தனது அண்ணனின் உடலை அந்தப் பெட்டியில் வைத்து அஞ்சலிக்காக தயார் செய்து இருக்கிறார் சரவணன். இந்நிலையில் அனைத்து உறவினர்களும் ஒன்றாககூடி பாலசுப்பிரமணிய குமாருக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கி இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து நேற்று மதியம் குளிர்சாதனப் பெட்டியை திரும்ப எடுப்பதற்காக ஊழியர்கள் மீண்டும் அதே வீட்டிற்கு வந்தபோது அவர்களுக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

காரணம் உயிரிழந்ததாக எல்லோரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் பாலசுப்பிரமணிய குமார் உயிரோடு அந்த ஃப்ரீசர் பெட்டிக்குள் தவித்து வந்ததைப் பார்த்து இருக்கின்றனர். உடனே அவரது தம்பியான சரவணனை அழைத்து முதியவர் இன்னும் உயிரிழக்கவில்லை எனக்கூறி பதறியிருக்கின்றனர். ஆனால் இதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாத சரவணன் இன்னும் சற்று நேரத்தில் உயிரிழந்து விடுவார் என அசலாட்டாக சொல்லி இருக்கிறார். இதனால் அருகில் இருந்த உறவினர்களும் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.

இதனால் உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விரைந்து வந்த காவல் துறையினர் முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனிதாபிமானமே இல்லாமல் உயிரோடு இருக்கும் அண்ணனை இப்படி கொல்ல முயற்சிக்கலாமா என அப்பகுதியில் உள்ளவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.