ட்ரம்பை கடவுளாக வணங்கி வரும் கர்நாடக இளைஞர் – மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கை

கர்நாடகத்தை சேர்ந்த புஷா கிருஷ்ணா என்பவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மீது கொண்ட ஈர்ப்பினால் அவரைக் கடவுளாகவே நினைக்க ஆரம்பித்தார். எனவே 6 அடியில் தனது வீட்டிற்கு முன்பு ஒரு சிலையையும் ஒரு மாத காலமாக முயற்சியில் உருவாக்கி உள்ளார். இந்த சிலைக்கு தினமும்  மாலை அணிவித்து, குங்குமம், சந்தனம் சகிதம் மிகவும் விமர்சையாக பூஜை போடுகிறார். காலையில் எழுந்தவுடன் ட்ரம்பின் படத்தை வணங்கி விட்டுத்தான் எந்த வேலையாக இருந்தாலும் தொடங்குகிறார்.

இவரது செயலைப் பார்த்த அவ்வூர் மக்கள் புஷா கிருஷ்ணாவை, ட்ரம்ப் கிருஷ்ணா என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர். அவரது வீட்டையும் ட்ரம்ப் வீடு என்றே குறிப்பிடுகின்றனர். மேலும், ஒவ்வொரு வெள்ளிக் கிழைமைகளிலும் தன்னுடைய ட்ரம்ப் சாமிக்காக விரதத்தையும் கடைபிடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

வரும் 25, 26 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையை ஒட்டி எப்படியாவது அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய அரசிற்கு ட்ரம்ப் கிருஷ்ணா தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார் .

மேலும், இந்தியா அமெரிக்க உறவு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும், ட்ரம்ப் உடல் நலத்தோடு நீண்டகாலம் வாழ வேண்டும் என விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பை சந்திக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. ட்ரம்ப்பின் இந்தியா வருகையின் போது இதற்கு வாய்ப்பு கிடைக்குமானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் எனவும் தெரிவித்துள்ளார்.