12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற கடைகள், தொழிற்சாலைகள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டது. மேலும் பேருந்து, ரயில் உள்பட அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒருசில தொழிற்சாலைகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசுஅனுமதி அளித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவைப்படும் செயற்கை சுவாச கருவிகள், கொரோனா தடுப்பிற்காக பயன்படுத்தப்படும் மலேரியா தடுப்பு மருந்துகள், விட்டமின் சி மாத்திரைகள், கொரோனா பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதற்காக அரசிற்கு கருத்துரு அனுப்பிய தனியார் நிறுவனங்கள் உடனடியாக உற்பத்தியை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.