தொடங்கியது தமிழகத்தில் தடை உத்தரவு: என்னென்ன கிடைக்கும்? கிடைக்காது?

தமிழகத்தில் 144 தடை உத்தரவு சற்றுமுன் அதாவது மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த தடை உத்தரவு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

144 தடை உத்தரவு காலத்தில் 5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை. பால், காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி கடைகள் தொடர்ந்து இயங்கும். உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி. பெட்ரோல் பங்குகள், எல்பிஜி கேஸ் நிரப்பும் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும்

கடைகளுக்கு செல்லும் போதும், மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவில் இருந்து விலக்கு

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் செயல்படும். மேலும் கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிக வரி மற்றும் பதிவு அலுவலகங்கள் எனவும் ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள் செயல்படும். ஏடிஎம்களும் செயல்படும். மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு செல்வதற்கு மட்டும் வாடகை கார்களை இயக்கலாம்.

அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். ஸ்விக்கி, ஷொமாட்டோ, உபர் ஈட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.