close
Choose your channels

சீனாவிற்கு எதிரான 5 Eyes உளவுத்துறையின் 15 பக்க ரிப்போர்ட்!!! என்ன சொல்கிறது???

Monday, May 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவிற்கு எதிரான 5 Eyes உளவுத்துறையின் 15 பக்க ரிப்போர்ட்!!! என்ன சொல்கிறது???

 

கொரோனா பரவல் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகளை உலக நாடுகள் முன்வைத்து வருகின்றன. சீனாவின் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கசிந்ததுதான் கொரோனா வைரஸ் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக சந்தேகப்படுகிறார். இந்த விவகாரம் குறித்து தனது அதிகாரிகள் சீனாவிற்குள் நுழைந்து விசாரணை நடத்துவார்கள் எனவும் அதிபர் எச்சரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து பல உலக நாடுகளிடையே இந்த விவகாரம் பூதாகரமாக மாறியது. அடுத்ததாக, ஆஸ்திரேலியா அதிபர் கொரோனா வைரஸ் பரவல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இந்தாண்டு உலகச் சுகாதார மாநாட்டின் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டார்.

இதைத்தவிர, கொரோனா பரவல் குறித்த விசாரணைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன. உலக நாடுகளுக்கு இடையிலான எதிர்ப்பு குணங்களைத் தாண்டி பரவல் குறித்த ஆரம்ப நிலையை தெரிந்து கொள்வது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாக இருக்கலாம் எனவும் சில நாடுகள் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

சீனாவிற்கு ஆதரவாக உலகச் சுகாதார நிறுவனம் செயல்படுகிறது என்ற குற்றம்சாட்டையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வைத்திருந்தார். கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்ற தகவலை முதலில் சீன அரசு மறைத்து விட்டது. இந்த செய்தியை தாமதமாக வெயிட்டதால்தான் உலக நாடுகளிடையே வைரஸ் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் இந்நடவடிக்கைகளுக்கு WHO ஒத்துழைப்புக் கொடுக்கிறது என்று அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டியதுடன் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கிவரும் நன்கொடையையும் நிறுத்திவிட்டார். இக்கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் Fox ஊடகமும் கடந்த ஏப்ரலில் சீனாவின் வைராலஜி ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்று செய்தி வெளியிட்டது.

இந்த விவகாரங்களுக்கு மத்தியில் “கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்தது அல்ல என்றும் இயற்கையாக பரிணமித்தது” என்றும் சீனாவின் வைரலாஜி ஆய்வகத்தின் சார்பாக ஏப்ரல் மாத இறுதியில் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து WHO வின் செய்தித் தொடர்பாளர் ஃபடெலா சைப் “கொரோனா வைரஸ் ஒரு விலங்கிலிருந்து பரவியதுதான், செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதல்ல” எனத் தெளிவுபடுத்தினார். இதைத்தவிர கடந்த வாரத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியா சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வெளியானது என்பதற்கான ஆதாரம் இருப்பதாக ஏப்ரல் 28 வாக்கில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாளே மறுபடியும் கொரோனா வைரஸ் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டதல்ல என்று WHO தெளிவுபடுத்தியது.

இப்படி அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளும் அதற்கு மறுப்புகளும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக ஒரு உளவுத்துறை ரிப்போட் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் “Five Eyes” என்ற உளவுத்துறை “கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்ற தகவலை சீனா மறைத்துவிட்டது” என்பதற்கான ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்த 15 பக்க அறிக்கையை இந்த உளவுத்துறை வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்தும் ரஷ்ய உளவுத்துறையின் தரவுகளைத் திரட்டவும் அமெரிக்கா மற்றும் United Kingdom ஆகிய நாடுகள் “Five Eyes” அமைப்பை ஏற்படுத்தின. அந்நடவடிக்கையில் இருநாடுகளுக்குமான உளவுத்துறை தகவல்கள் பகிர்ந்துகொள்வது குறித்த புரிதல்களும் இடம்பெற்றன. முதலில் இருநாடுகளுக்கு மட்டுமே உரியதாக செயல்பட்ட Five Eyes அமைப்பில் மேலும் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் சேர்ந்துகொண்டன. மேற்குலகில் 5 நாடுகளுக்கு மத்தியில் செயல்படும் பணிகளைக் கொண்டு உலக நாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் இந்த உளவுத்துறை அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 5 முக்கிய நாடுகளோடு டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, நார்வே, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளும் இணைந்துகொண்டன. மேற்குலக நாடுகளால் இயக்கப்பட்டு வரும் “Five Eyes” உளவுத்துறைதான் தற்போது கொரோனா பரவலில் சீனா அரசாங்கம் தவறிழைத்து இருக்கிறது என்ற அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

“Five Eyes” உளவுத்துறை ஆவணங்கள்

முதன் முதலில் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் என்ற தகவலை ஆஸ்திரேலியா செய்தி ஊடகமான The Daily telegram ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வெளியிட்டது. ஆனால் இதற்கு முன்னதாகவே சீனாவிற்கு இந்த விவகாரம் தெரியும் என்றும் அதை வேண்டுமென்றே மறைத்துவிட்டதாகவும் தற்போது “Five Eyes” உளவுத்துறை ஆவணங்களை வெளியிட்டு இருக்கிறது. சீனாவின் வைரலாஜி ஆய்வகத்தில் பல ஆண்டுகளாக வௌவால்களில் இருக்கும் வைரஸ்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வௌவால்கள் தொடர்பான ஆராய்ச்சியை சீன ஆராய்ச்சியாளர்கள் 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கினர். அப்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களின் மரபணுவும் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் மரபணுவும் கிட்டத்தட்ட 96 விழுக்காடு பொருத்தமாக இருக்கிறது என சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் எனறும் அந்த உளவுத்துறை ரிப்போட் குறிப்பிடுகிறது. மேலும், 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் எனவும் உளவுத்துறை ரிப்போட் குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியான பின்பு கொரோனா வைரஸ் ஆய்வுகள் தொடர்பான எந்தத் தகவலையும் அறிந்து கொள்ளமுடியாபடி இணைய வழிகள் முடக்கப்பட்டதாகவும் ரிப்போட் கூறுகிறது. சீனாவில் கொரோனா குடும்ப வகை வைரஸ்களை குறித்து ஆய்வு செய்துவந்த ஆய்வக மாதிரிகள் அழிக்கப்பட்டது எனவும் மிகவும் நெருக்கமான கட்டமைப்பில் இயங்கிவந்த இறைச்சிக் கூடங்களுக்கு சீன அரசாங்கம் தடை விதித்ததாகவும் பலத் தகவல்களை “Five Eyes” உளவுத்துறை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

“கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும்“ என்ற தகவலை சீனா அரசாங்கம் மறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரங்கள் இருப்பதாக Five Eyes” உளவுத்துறை தற்போது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவைத் தொடர்ந்து உலகச் சுகாதார அமைப்பும் கடந்த ஜனவரியின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்ற தகவலை மறைத்துவிட்டதாகவும் இந்த உளவுத்துறை ரிப்போட் கருத்துக் கூறுகிறது. மேலும், சீனா கொரோனா தடுப்பு மருந்துத் தொடர்பான உலக நாடுகளின் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டதாகவும் இந்த ரிப்போர்ட் குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்த உளவுத்துறை ரிப்போட் ஆவணங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு தற்போது சில நாடுகள், சர்வதேச வெளிப்படைத் தன்மை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விமர்சித்து வருகின்றன. மேலும், இனிவரும் காலங்களில் சீனாவுடனான தொடர்பை குறித்து மேற்குலக நாடுகள் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.