close
Choose your channels

சுடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2,000 ஆண்டு பழமையான நச்சில்லாத மது… தெறிக்கவிடும் தகவல்!!!

Thursday, September 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2,000 ஆண்டு பழமையான நச்சில்லாத மது… தெறிக்கவிடும் தகவல்!!!

 

சீனக் கல்லறை ஒன்றில் இருந்து 2 ஆயிரம் பழமையான மது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சன்மென்ஷியா எனும் நகரக் கல்லறையில் இருந்து இந்த மது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் 13 அடி ஆழத்தில் இருந்து ஒரு வெள்ளைநிற வெண்கலப் பாத்திரத்தைக் கண்டுபிடித்ததாகவும் அதில் 3 லிட்டருக்கும் மேல் பழுப்பு நிறத் திரவம் இருந்ததாகவும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் வெண்கலப் பாத்திரத்தில் இருந்தது என்ன வகையான திரவம் என்பதை பெய்ஜிங் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆய்வில் இது மருந்து வகைப்பட்ட மதுவகை என்பதையும் தற்போது தெளிவுப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த காலத்தில் மயக்க மருந்திற்கு பதிலாக இந்தவகை மதுக்களைப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இந்த மது நச்சுத் தன்மையே இல்லாமல் இருப்பதுதான். இதனால் நச்சுத்தன்மை இல்லாத மதுவை இப்போது அருந்தலாமா என்ற ரீதியிலும் தற்போது ஆய்வு மேற்கொள்ளப் படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மது வைக்கப்பட்டிருந்த வெள்ளைநிற வெண்கலப் பாத்திரத்தைக் குறித்து விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

வளைந்து நெளிந்து இருக்கும் வெள்ளைநிற வெண்கலப் பாத்திரம் தன்னுடைய வடிவத்தால் இத்தனை ஆண்டுகாலமாக மதுவை ஆவியாகாமல் பாதுகாத்து இருக்கிறது. மேலும் இந்தக் கல்லறைத் தோட்டம் ஹான் வம்சவத்தை சேர்ந்த அரசர் ஆட்சிபுரிந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது என்ற தகவலையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர். அதன் காலம் சரியாக கி.மு.206 ஆண்டு 24 ஆம் தேதி எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்ட சீன மருத்துவ நூலிலும் இந்த மது திரவத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

மேலும் மது வைக்கப்பட்டிருந்த கல்லறையில் போர் வீரர் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் எனக் கூறிய தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கிருந்து இரும்பினால் செய்யப்பட்ட வாள் மற்றும் வெண்கலப் பாத்திரத்தையும் கண்டுபிடித்ததாகத் தெரிவித்து உள்ளனர். போர் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்தக் கல்லறையில் மது வைக்கப்பட்டு இருப்பதை வைத்து அந்தக் காலத்தில் மயக்க மருந்திற்கு பதிலாக இந்தவகை மதுவை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.