தமிழக கொரோனா பாதிப்பில் மீண்டும் புதிய உச்சம்:பிற மாவட்டங்களிலும் பரவுவதால் பதட்டம்

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று 2500ஐ தாண்டியது என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம். ஆனால் இன்று 2700ஐ தாண்டி மூவாயிரத்தை நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 2710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62087.ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,752ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 37 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1358 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 34,112 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் 25,234 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 9,19,204 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.