Download App

2Point0 Review

பிரமாண்டத்தின் உச்சகட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் + ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம்தான். அதிலும் இந்த முறை லைகாவும் இணைந்ததால் இந்த படம் பிரமாண்டத்தின் உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஜினி-ஷங்கர் படங்கள் இதுவரை எதிர்பார்ப்பை ஏமாற்றாத நிலையில் இந்த படம் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. பறவை உள்பட எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம். அப்படிப்பட்ட இந்த பூமியை மனிதன் உபயோகிக்கும் அளவுக்கு அதிகமான செல்போன்களால் பறவைகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் பறவைகளின்  காவலனாக இருக்கும் பக்சிராஜா (அக்சயகுமார்) செல்போன்களின் தீமையை மனிதர்களிடம் விளக்குகிறார். ஆனால் ஒருவரும் காது கொடுத்து கேட்காதது மட்டுமின்றி அவரை அவமானப்படுத்துகிறார்கள். அரசாங்கமும் ஒத்துழைக்க மறுக்கின்றது. செல்போன் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடித்து துரத்துகின்றன. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்யும் அக்சயகுமார், மறைந்த பறவைகளின் ஆன்மாக்களுடன் சேர்ந்து மனிதர்களுக்கு எதிராக நடத்தும் தாக்குதலும், அந்த தாக்குதலை முறியடிக்க வசீகரன் (ரஜினிகாந்த்) உயிர்ப்பிக்கும் சிட்டி எடுக்கும் டெக்னாலஜி முயற்சிகளும்தான் மீதிப்படம்

'எந்திரன்' படத்தில் வசீகரன், சிட்டி மற்றும் நெகட்டிவ் ரோபோ என மூன்று கெட்டப்புகளில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்தில் அந்த மூன்று கேரக்டர்கள் மட்டுமின்றி நான்காவதாக 3.0 என்ற கேரக்டரிலும் கலக்கியுள்ளார். இந்த கேரக்டர் சரியான நேரத்தில் அறிமுகமாகுவதும், அந்த அறிமுகத்தின்போது தியேட்டரே விசில் சத்தத்தில் அதிர்வதும் இதுவரை இல்லாத ஒரு அனுபவம்

இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னர் பலரும் பயந்த ஒரு விஷயம் ஒரிஜினல் ரஜினியை அதிகம் பயன்படுத்தாமல், அதிகமான கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டு ஷங்கர் எடுத்திருப்பார் என்பதுதான். ஆனால் அந்த தவறை ஷங்கர் செய்யவில்லை என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் ரஜினியை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் கேரக்டர்களாக காட்டாமல், அவருடைய ஒரிஜினல் உருவத்தை பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தியிருக்கின்றார். வழக்கமான அமைதியுடன் கூடிய வசீகரன் கேரக்டர், பாசிட்டிவ் எனர்ஜியுடன் கூடிய சிட்டி அக்சயகுமாருடன் மோதும் காட்சிகள் அதன் பின்னர் திடீர் திருப்பமாக எண்ட்ரியாகும் 2.0, கடைசியாக 3.0 என படம் முழுக்க முழுக்க தலைவரின் ராஜ்ஜியம் தான். குறிப்பாக 2.0 ரஜினி கேரக்டர் எண்ட்ரியாகும்போது தியேட்டரே அதிர்கிறது. அந்த 'குக்கூ' காட்சி படம் முடிந்து வெளியே வந்தபின்னரும் கண்ணுக்குள்ளே இருக்கின்றது.

வசீகரனின் உதவியாளரான ரோபோ கேரக்டர் எமி ஜாக்சனுக்கு. ஒரு ரோபோவாகவும், ரோபோக்கும் இருக்கும் மனித உணர்ச்சிகளையும் வித்தியாசப்படுத்தி அழகாக காட்டியுள்ளார். 2.0 ரஜினியை மனதிற்குள் காதலிப்பதை ஒரு ரோபோவின் பார்வையில் இருந்து அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். 

இடைவேளையில் எண்ட்ரி ஆகும் அக்சயகுமார், இடைவேளைக்கு பின் 15 நிமிடங்கள் மனதை உருக செய்கிறார். பட்சிராஜா என்ற பறவைகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஒரு சின்ன அருமையான பிளாஷ்பேக்கும் அவருக்கு உண்டு. பறவைகளுடன் இவ்வளவு அன்னியோன்யமாக ஒரு மனிதனால் இருக்க முடியுமா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் காட்சிகளில் அவருடைய அனுபவ நடிப்பும் இணைந்துள்ளதால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிகிறார். ஆனால் அதே நேரத்தில் ரஜினியை பயன்படுத்திய அளவுக்கு இயக்குனர் ஷங்கர், அக்சயகுமாரை பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. பதினைந்து நிமிடங்கள் தவிர இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் அக்சயகுமார் என்பதால் அவருடைய ஒரிஜினல் உணர்வுகள், நடிப்பை காண முடியவில்லை.

முதல் பாகத்தில் வில்லனாக நடித்த டேனியின் மகனாக நடித்த சுதன்ஷூ பாண்டே, உள்துறை அமைச்சராக நடித்த அதில்ஹூசைன், ஆகியோர்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தின் இன்னொரு நாயகன். பிரமாண்டமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள பின்னணி இசை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். குறிப்பாக 2.0 மற்றும் 3.0 எண்ட்ரியாகும்போது பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களும் அருமை

பிரமாண்டமான காட்சிகளை நம் கண்முன்னே கொண்டு வரும் மிகப்பெரிய சவாலை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கையில் எடுத்து அதை சக்சஸ் செய்தும் காட்டியுள்ளார். செல்போன்கள் ஊர்ந்து செல்லும் காட்சிகள், பறவைகளின் அதிசயமான காட்சிகள் மிக அருமை

எடிட்டர் அந்தோணியின் கச்சிதமான எடிட்டிங் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. காமெடி, ரொமான்ஸ் ஆகியவை படத்தின் கதையோடு நகர்வதால் எந்த காட்சியும் தேவையில்லாத காட்சி என்று நினைக்க தோன்றவில்லை

யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஷங்கரின் கற்பனைகள், அந்த கற்பனையை காட்சியாக கொண்டு வர அவர் எடுத்திருக்கும் முயற்சிகள், இந்த முயற்சிகளுக்கு உயிர் கொடுத்த டெக்னீஷியன்களுக்கு பாராட்டு தெரிவிக்க தமிழில் வார்த்தையே இல்லை என்று கூறலாம். குறிப்பாக கடைசி அரை மணி நேரம் ஹாலிவுட் இயக்குனர்களே பார்த்து வியக்கும் அளவுக்கு உள்ளது. ஆரம்பத்தில் செல்போன்கள் பறக்கும் காட்சி முதல் இறுதியில் மைதானத்தில் ரஜினி-அக்சய் மோதும் காட்சிகள் வரை ஷங்கரின் கற்பனைகள் அபரீதமானது. 

அக்சயகுமாரை அழிக்க சிட்டியை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வசீகரன் சொல்லும்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் உள்துறை அமைச்சர், தன் கண்முன்னே சக அமைச்சர் ஒருவர் பலியானதை கண்டவுடன் சிட்டியை உயிர்ப்பிக்க அனுமதி கொடுப்பது அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தும் காட்சியாக உள்ளது. அப்போது ரஜினி அமைச்சருக்கு கொடுக்கும் பதிலடி வசனங்கள் சூப்பர். 



செல்போன்களால் மற்ற உயிரினங்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஏற்படும் தீங்கை ஜெயமோகனின் ஆழமான வசனங்கள் மூலம் புரிய வைக்கபடுகிறது. மேலும் இந்த பூமியானது மனிதகளுக்கு மட்டுமில்லை. விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமானதுதான். மனிதர்களுக்கு எதிராக அவற்றால் குரல் எழுப்ப முடியாது. ஆனால் ஒரு கற்பனைக்கு அவை ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப தொடங்கிவிட்டால் மனித இனத்தை காப்பாற்ற மனிதர்களால் கூட முடியாது. மனிதசக்தியை மீறிய ஒரு சக்தியால் மட்டுமே முடியும் என்பதை இந்த படம் மூலம் ஷங்கர் புரிய வைத்துள்ளார்.. எனவே விலங்குகள், பறவைகள் வாழ்வதற்கும் உரிமை உள்ளது என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் என்ற ஆழமான கருத்தை இவ்வளவு அழுத்தமாக ஷங்கரை தவிர வேறு யாராவது இதுவரை கூறியிருப்பார்களா? என்பது சந்தேகம்தான். இந்த படம் பார்க்கும் ஒருசிலருக்காவது இயற்கையை அழிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றினால் அதுவே இந்த படத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும்.

'ஐ அம் வெயிட்டிங், நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை, போன்ற மற்ற பெரிய நடிகர்களின் வசனத்தை சரியான இடத்தில் வைத்தது சிறப்பு என்றால் அதை ரஜினி அனுமதித்த பெருந்தன்மையும் பாராட்டுக்குரியது.

இந்த படத்தின் குறைகள் என்று பார்த்தால் வழக்கமான ரஜினி படங்களில் உள்ள மாஸ் எண்ட்ரி இந்த படத்தில் இல்லை. மிக சாதாரணமாக உள்ளது ரஜினியின் அறிமுகம். மற்றபடி நமது கண்களுக்கு வேறு பெரிய குறைகள் தெரியவில்லை. 

மொத்தத்தில் வெறும் டெக்னாலஜி விருந்து மட்டுமின்றி இன்றைய நவீன உலகிற்கு தேவையான, அவசியமான கருத்துடன் கூடிய படம் என்பதால் இந்த படத்தை செலவை பார்க்காமல் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு விஷுவல் ட்ரீட் படம்

Rating : 3.3 / 5.0