பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பா.ஜ.க தொண்டர்கள்… பிரதமர் கண்டனம்!!!

  • IndiaGlitz, [Friday,October 30 2020]

 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த 3 தொண்டர்கள் பயங்கரவாதிகளால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்திற்கு பாஜக பிரமுகர்கள், தலைவர்கள் எனப் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

குல்காம் மாவட்டம் ஒய்.கே.போரா எனும் பகுதியில் நேற்று மாலை பயங்கரவாதிகள் பாஜக தொண்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஃபிதா ஹுசேன், உமர் ஹஜாம் மற்றும் உமர் ரஷீத் பேக் ஆகிய 3 பேரின் உடலிலும் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அவர்களை மீட்டு காசிகுண்ட் எனும் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இத்தாக்குதலுக்கு லஷ்கர்-இதொய்பா அமைப்போடு தொடர்புடைய டிஆர்எப் எனும் அமைப்பு பொறுப்பு ஏற்றிருக்கிறது. இதே போல் கடந்த ஜுன் மாதத்திலும் பயங்கரவாதிகள் பாஜகவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர். அந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காஷ்மீரில் பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் 3 பாஜக தொண்டர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உள்ளார். இபோல கடந்த ஜுலை மாதம் பந்திபோரா மாவட்டத்தில் பாஜக தலைவர் அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.