கொரோனா தாக்கத்தால் சவுதியில் ஆயிரகணக்கான இந்தியர்கள் வேலையிழப்பு… தெருவில் கையேந்திய அவலம்!!!

  • IndiaGlitz, [Monday,September 21 2020]

 

கொரோனா தாக்கத்தால் சவுதியில் வேலைப்பார்த்து வந்த பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தற்போது வேலை இழந்து தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் பலரது வேலைக்கான பர்மிட் முடிந்தும் இந்தியாவிற்கு திரும்பி வரமுடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சாப்பிடுவதற்குகூட வழியில்லாம் சவுதியின் தெருக்களில் பல மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை தெருவில் சாப்பாட்டுக்காக யாசகம் கேட்ட 450 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள தடுப்பு காவல் பிரிவில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், கர்நாடகா, பீகார், டெல்லி, ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்றும் தகவல் கூறப்படுகின்றன. இந்நிலையில் அவர்கள் தங்களின் அவல நிலையைக் குறித்து இந்திய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அப்படி ஒரு வீடியோவில் “நாங்கள் செய்த குற்றம் யாசகம் கேட்டதுதான். வேறு எந்த தவறும் செய்யவில்லை. வேலை இழந்ததால் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோம். தடுப்பு காவல் மையத்தில் துன்பத்தை அனுபவித்து வருகிறோம்” என்று ஒருவர் கண்ணீர் மல்க பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், இச்சம்பவத்தைக் குறித்து எம்பிடி தலைவரான அம்ஜத் உல்லா கான், பர்மிட் முடிந்தவர்களைத்தான் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அவர்களை மீட்ககோரி, இந்திய பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சவுதிக்கான இந்திய தூதரர் அவுசப் சயீத் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப் பட்டு உள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.