மூடப்படாத விமானத்தில் 600பேர் பயணித்த காட்சி…நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞயாற்றுக்கிழமை காலை தாலிபான்கள் கைப்பற்றிய உடனேயே ஆப்கன் மக்கள் தங்கள் தலைவிதி மாறிவிட்டதாகப் பீதி அடைந்தனர். அதற்கு காரணம் காபூல் நோக்கி வந்த தாலிபான்கள் வெறும் 5 மணிநேரத்தில் அந்த நகரம் முழுவதையும் தங்களது பிடிக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களின் வேகத்தைப் பார்த்து மிரண்டுபோன பொதுமக்கள் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மொய்க்கத் துவங்கி விட்டனர்.

இந்நிலையில் காபூலில் இருந்து கத்தாருக்குப் புறப்பட்ட C-17 Globemaster இராணுவ விமானத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 640 பேர் நெருக்கமாக அமர்ந்து பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உடைமைகள் எதுவும் இன்றி ஒருவர் மீது ஒருவர் அமர்ந்த ஆப்கன் மக்கள் வேறொரு நாட்டை நோக்கி தஞ்சமடைந்த காட்சி தற்போது உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதே விமானத்தின் டயரைப் பிடித்து 3 பேர் தொங்கியபடி பயணித்ததும் அவர்கள் நடுவானில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவமும் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்காவின் C-17 சரக்கு விமானத்தில் மனித உடல்பாகம் ரத்தக்கறையுடன் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதோடு இந்த விமானம் காபூலில் இருந்து புறப்பட்டபோது பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என 640 பேர் முண்டியடித்து ஏறியதால் அதன் கதவுகள் மூடப்படாமலேயே பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் தற்போது காண்போரை பதைக்க வைத்திருக்கிறது.