உறவினரின் வளைகாப்புக்கு புதுவை சென்று வந்த சென்னை நபர் கொரோனாவுக்கு பலி!

புதுவையில் உள்ள உறவினர் வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் ஒரு சிலர் முறைகேடாக வெளியூர் சென்று வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த தியாகராஜன் என்பவரது மகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தியாகராஜனின் உறவினரான சென்னையை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் தனது குடும்பத்துடன் அந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். சென்னையில் இருந்து புதுவை சென்றபோதிலும் செக்போஸ்டை ஏமாற்றி புதுவைக்குள் சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியை முடிந்து விட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பிய முதியவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் அவர் சென்னையில் சிகிச்சை பெற விரும்பாமல் புதுச்சேரிக்கே சென்று சிகிச்சை பெறலாம் என்று மீண்டும் காரில் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அப்போது புதுவை சோதனை சாவடியில் சிக்கிய அவர்களை போலீசார் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காரில் சென்ற முதியவர் உள்பட 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 75 ஒரு முதியவர் இன்று பலியாகியுள்ளார். இதனால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அனுமதியின்றி வளைகாப்பு நடத்திய தியாகராஜன் மீதும், அனுமதியின்றி சென்னையில் இருந்து புதுவை வந்த முதியவரின் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.