ஐன்ஸ்டீனை மிஞ்சிய 8 வயது சிறுமி… அபூர்வத் திறமையால் அசத்தல்!

  • IndiaGlitz, [Saturday,September 11 2021]

மெக்சிகோவை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவருக்கு உலக அறிவாளிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸைவிட ஐக்யூ லெவல் அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் 8 வயதே ஆகும் இந்தச் சிறுமி தன்னுடைய பள்ளிப் படிப்புகளை முடித்துவிட்டு ஆன்லைனில் 2 பட்டப்படிப்புகளையும் முடித்துள்ளாராம்.

சில விஞ்ஞானிகள் தங்களுக்கு ஐக்யூ லெவல் அதிகமாக இருப்பதாலேயே சாதாரண மனிதர்களைப் போல நடந்துகொள்ள மாட்டர்கள். ஆனால் படிப்பு, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் தங்களது கவனத்தைச் செலுத்தி ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள். அந்த வகையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஐக்யூ லெவல் 160 இருந்ததாம். அதேபோல ஸ்டீபன் ஹாக்கின்ஸ்க்கும் ஐக்யூ லெவல் 160 இருந்ததாகத் தகவல் கூறப்படுகிறது.

தற்போது ஐன்ஸ்டீன், ஹாக்கின்ஸையே தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவிற்கு 8 வயது சிறுமி அதாரா பெரெஸ் என்பவர் 162 ஐக்யூ லெவலுடன் வளர்ந்து வருகிறார். சாதாரண சிறுவர்களைப் போலவோ அல்லது சமூக உறவுகளுடன் பழகவோ முடியாத அந்தச் சிறுமி தற்போது 8 வயதில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஆன்லைனில் 2 பட்டப்படிப்புகளையும் முடித்துள்ளார்.

மேலும் “Do Not Give Up“ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். ஃபோர்ப்ஸ் இந்த சிறுமியை 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தேர்ந்தெடுத்துள்ளது.

மேலும் அதாரா தன்னுடைய திறமைக்கு அடையாளமாக மாற்றுத் திறனாளிகளின் உணர்ச்சிகளைக் கண்காணிக்கும் புதிய ஸ்மார்ட் பிரேஸ்லெட் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார். கூடவே அரிசோனா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வுக்கும் தயாராகி வருகிறாராம். அதோடு வானியல் இயற்பியல் குறித்து ஆராய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.