திடீர் நிலச்சரிவு… நொடிப்பொழுதில் பாலத்தையே விழுங்கிய கோரக் காட்சி!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

இந்தியா முழுக்கவே பல மாநிலங்களில் தற்போது கனமழை பெய்துவருகிறது. அந்த வகையில் தற்போது இம்மாச்சல் மாநில எல்லையில் பெய்த கனமழையால் அங்குள்ள பல பகுதிகளில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில் அருகில் இருந்த பாலம் ஒன்று உடைந்துபோன கோர நிகழ்ச்சி பார்ப்போரை பதற வைத்து இருக்கிறது. மேலும் இந்த விபத்தில் சிக்கி பெண்மருத்துவர் உட்பட 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த 25 ஆம் தேதி மதியம் இந்தியா-திபெத் எல்லையருகே உள்ள ஹிமாச்சல் மாநிலம் கின்னார் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சங்கலா- சிட்குல் பகுதியில் உள்ள ஒரு பாலமே உடைந்துபோய் கூடவே அந்த பாலத்தில் சென்றுகொண்டிருந்த பல சுற்றுலா வாகனங்களின் மீது பெரிய பெரிய பாறைகள் விழுந்து இருக்கின்றன.

அப்படி பாறைகள் விழுந்த விபத்தில் ஜெய்ப்பூர் இருந்து சுற்றுலா சென்ற பெண் மருத்துவர் ஒருவரின் காரின்மீதும் பாறைகள் விழுந்து இருக்கிறது. இதனால் பிறந்தநாளை கொண்டாடச் சென்ற இடத்தில் அந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதேபோல அருகில் இருந்த பல வாகனங்களில் பாறைகள் விழுந்து, சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பெரிய மலையில் இருந்து பாறைகள் சரிந்துவிழும் இந்தக் காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் இருந்த சிலர், பாறைகள் விழுவதைப் பார்த்து பதறி எச்சரித்தபோதும் கணநேரத்தில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்து இருப்பது பற்றி பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

கூடவே விபத்தில் உயிரிழந்த அனைவருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மோடி அவர்கள் அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.