90 வயதில் பஞ்சாயத்து தலைவரான மூதாட்டி… எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி!

  • IndiaGlitz, [Wednesday,October 13 2021]

தமிழகத்தில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலுக்கான வாக்குகள் நேற்றுமுதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்குப் போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் அமோக வெற்றிப்பெற்றுள்ளார். மேலும் தன்னை எதிர்த்தவர்களின் டெபாசிட்டையும் அவர் காலி செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6-9 ஆம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்றுமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பெருமாத்தாள் என்ற 90 வயது மூதாட்டி 1558 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்திலுள்ள வேட்பாளரைவிட இவர் 1000 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.

மேலும் சிவந்திப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பெருமாத்தாளை எதிர்த்து நின்ற செல்வராணி, உமா எனும் இரண்டு வேட்பாளர்களும் டெபாசிட் இழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்து அலுவலரிடம் பெருமாத்தாள் பெற்றுக்கொண்டார். இதனால் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த பெருமாத்தாளுக்கு அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து அவரது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.