100% இருக்கைகள் அனுமதியை எதிர்த்து வழக்கு: விசாரணை எப்போது?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக முதல்வரைச் சந்தித்து திரையரங்குகளுக்கு 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியானது.
இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு, தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
இந்த முறையீட்டு மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த விசாரணையில் 100% இருக்கைகளுக்கு அனுமதி என்ற அரசாணை ரத்து செய்யப்படுமா? அல்லது 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் திரைப்படங்களின் நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.