பேப்பர் படித்து கொண்டே பஸ் ஓட்டும் சென்னை மாநகர பேருந்து டிரைவர்

  • IndiaGlitz, [Monday,July 02 2018]

ஒருசில டிரைவர்கள் மொபைல்போனில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவதைத்தான் இதுவரை நாம் பலமுறை பார்த்திருக்கின்றோம். ஆனால் சென்னையை சேர்ந்த மாநகர் பேருந்தை ஓட்டும் டிரைவர் ஒரு செய்தித்தாளை படித்து கொண்டே பேருந்தை ஓட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையில் 47D என்ற பேருந்து ஆவடியில் இருந்து திருவான்மியூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை இயக்கி கொண்டிருந்த டிரைவர் திடீரென செய்தி தாளை விரித்து ஸ்டிரியரிங் மேல் வைத்து கொண்டு பேப்பரையும் சாலையையும் பார்த்து கொண்டே பேருந்தை ஓட்டினார். இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் பேப்பரை மூடி வைத்துவிட்டு பேருந்தை ஓட்டுங்கள் என்று கூறியதை கூட அவர் காதில் வாங்கி கொள்ளாமல் நாட்டு நடப்பை அறிந்து கொள்வதில் அக்கறையுடன் இருந்தார்.

இந்த நிலையில் பயணி ஒருவர் இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து அம்பத்தூர் பணிமனையில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட டிரைவர் மீது துறைரீதியிலன நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரி உறுதி கொடுத்துள்ளார். பயணிகளின் உயிர்களோடு விளையாடும் இதுபோன்ற டிரைவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.