புயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ!!!
நிவர் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக சென்னையே ஸ்தம்பித்து போய் இருந்தது. இந்நிலையிலும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் அவசரத் தேவைக்காக தனியார் நிறுவனத்தின் கேப்பை இயக்கி இருக்கிறார் ஒரு இளைஞர். அவருடைய அனுபவம் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கிறது. காரணம் மற்ற நாட்களை விட கேப்பை புக் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருப்பதாகவும் தன்னிடம் அன்பாகப் பேசுவதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டு நம்மிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு உள்ளார்.
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தின் கேப் ஒன்றை இயக்கி வருகிறார். இவர் கடும் புயலுக்கு இடையிலும் திநகர், பெரம்பூர், கேகே நகர், சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் தொடர்ந்து தனது வாகனத்தின் மூலம் பல வாடிக்கையாளர்களை அழைத்து சென்றார். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது இன்று பெரும்பாலான போக்குவரத்துகள் இயக்கப்படாமல் இருக்கும். அவசரத் தேவைக்காக வெளியே செல்ல வேண்டும் என்றால் மக்கள் சிரமப்பட வேண்டி இருக்கும்.
அதை ஓரளவு நிவர்த்தி செய்ய வேண்டும் என நினைத்து நான் கடும் மழைக்கு இடையிலும் காரை ஓட்டி வருகிறேன். எனக்கு இது ஒரு நல்ல அனுபவமாகத்தான் இருக்கிறது. சிரமமாக உணரவில்லை. மேலும் காருக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. வாடிக்கையாளர்கள் கார் வந்துவிட்டது எனச் சந்தோஷப்படும்போது அதைப் பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது எனத் தெரிவித்து இருக்கிறார். மேலும் 2 கர்ப்பிணி பெண்களுக்கு பணம் வாங்கிக் கொள்ளாமலே சேவை ஆற்றியதாகவும் கூறியுள்ளார். பேரிடர் நேரத்திலும் இதுபோன்ற நெகிழ்ச்சி ஏற்படுத்தும் சம்பவங்களை சிலர் செய்துவருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.