தமிழகம் முழுவதும் பல பெயர்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு – ஒரு பார்வை

  • IndiaGlitz, [Thursday,January 16 2020]

 

விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ச்சியடையாத ஒரு வாழ்வியல் முறையில் எருதினை அடுக்குதல் மிகவும் உயர்ந்த வீரமாகக் கருதப்பட்டிருக்கலாம். தற்போதைய நாகரிகமான வாழ்வியல் முறைகளில் இத்தகைய வீர விளையாட்டு என்பது அவசியமான ஒன்றா என்ற கேள்வி கூட எழத்தான் செய்கிறது. ஆனால் இந்த விளையாட்டு முறையினை இன்றைய தலைமுறையினரும் கொண்டாடுவதற்கான காரணங்கள் மிகவும் முக்கியத்துவம் உடையதாகத் தான் இருக்கிறது.

சங்க இலக்கியம் மட்டுமல்லாது சிந்துசமவெளி முத்திரைகளிலும் எருதினை அடக்குவது போன்ற சித்திரங்கள் காணப்படுகின்றன. உலகில் பல இனங்களிலும் விலங்கினங்களோடு ஒன்றி வாழ்ந்த வாழ்வியல் முறைகளைக் பார்க்க முடிகிறது. இவ்வாறு வாழ்வியலோடு கலந்து விட்ட சில முத்திரைகள், சில விளையாட்டுகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் தொடர்ந்து அடுத்த அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்படுகின்றன. இதே போன்று மொழி என்று நாம் சாதாரணமாகக் கருதும் அடையாளத்திற்குப் பின்னால் நமது கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம், மரபு சார்ந்த அறிவு எனப் பல விஷயங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

நமது பண்பாட்டில் மறந்துபோன பல அரிய பழக்க வழக்கங்களை ஜல்லிக்கட்டு போன்ற ஒரு சில வடிவங்களில்தான் நம்மால் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள முடியும். பண்டைய காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டு நமது தமிழகத்தில் பல வடிவங்களில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு பெயர்க்காரணம்             

பண்டைய தமிழர் வாழ்க்கை முறையில் காதலும் வீரமும்  சமமான மதிப்பினையே பெற்றிருந்தது எனலாம்.  சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான கலித்தொகையின் முல்லைப்பாட்டில் ஏறுதழுவுதல் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. முல்லைப் பாட்டில் வரும் ஒரு ஆயர் குலத் தலைவி (ஒரு பெண்) தான் வளர்க்கும் காளையை அடக்கும் ஒரு வீரனையே, தனது கணவனாகத் தேர்ந்தெடுக்கிறாள். இவ்வாறு ஆயர் குல மக்கள் (மறவர்கள்) தங்களது வாழ்வியலோடு ஒன்றிணைந்து விட்ட காளையைத் திருமணத் தேர்வுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். கொல்லுகின்ற தன்மையுடைய காளையை அடக்கும் வீரனை ஒரு பெண், தனது அடுத்த பிறவியிலும் விரும்புவாளாம். காதலோடு இணைந்த இத்தகைய வீர விளையாட்டு அச்சமூகத்தில் வீரத்திற்குக் கொடுக்கப்பட்டு இருந்த மதிப்பினைக் காட்டுகிறது.

முல்லை நிலத்து ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனுக்கே தங்களது பெண்களைக் கொடுத்திருக்கின்றனர். இந்த வழக்கம் எதனால் எப்போது நிறுத்தப்பட்டது என்ற வரலாறு நம்மிடம் இல்லை. ஆனால் ஆயர் இன மக்கள் (மறவர்) மட்டுமே சங்க இலக்கியக் காலகட்டத்தில் திருமணத்திற்காக காளையை அடக்கும் ஏறுதழுவுதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே வேறு குலத்தைச் சார்ந்த ஆடவர்களும் இந்த ஏறுதழுவுதலில் கலந்து கொண்டிருக்கலாம். எனவே குலப் பெருமையைக் காக்க வேண்டி, திருமணத்திற்காக ஏறுதழுவுதல் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து சொல்லப்படுகிறது. பெரும்பாலும் நாகரிக கால கட்டத்தில் வீரத்திற்கான தேவையே இல்லாமலே போய் விட்டது. எனவே திருமணத்திற்காக ஏறுதழுவுதல் தற்போது பண்பாட்டு அடையாளமாக மாறிப்போய் இருக்கிறது.  

திருமணத்திற்காக ஏறுதழுவுகின்ற வழக்கம் குறைந்து போன பின்பு, பணத்திற்காகக் காளையை அடக்கும் விளையாட்டு முறை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. காளைகளின் கொம்புகளில் பணத்தினை முடிந்து விளையாட்டில் ஈடுபடுவர். கொம்புகளில் முடியப்பட்ட பணம் சல்லிக்காசு என்று பேச்சு வழக்கில் வழங்கப்பட்டிருக்கிறது. சல்லிக்காசு நாளடைவில் ஜல்லிக்கட்டு என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது எனலாம். சல்லிக்காசுக்காக விளையாடப்பட்ட ஜல்லிக்கட்டு தற்போது, முறையான விதிமுறைகளை வகுத்துக்கொண்டு விளையாடப்பட்டு வருகின்றன. பணத்திற்காக அறிவிக்கப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மட்டுமல்லாது தமிழகத்தில் பல இடங்களில் வேறு வடிவங்களிலும் இந்த ஏறுதழுவுதல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஏறுதழுவுதல் அல்லது ஏறுகோள்

இம்முறை சங்க இலக்கியக் கால கட்டத்தில் முல்லை நிலத்து ஆயர் இன மக்களிடையே திருமணத்திற்காக நடத்தப் பட்ட போட்டியாகும். ஆயர் இனப் பெண்கள் தான் வளர்க்கும் காளையை அடக்குபவனையே விரும்பியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஏறு – காளை. காளை மாட்டின் முதுகின் மீது ஏறி அதனைத் தழுவும் முறையினால் இப்பெயர் வைக்கப்பட்டிருந்தது எனலாம்.

சில வேறுபாடுகள்

தமிழகத்தின் தென் பகுதிகளில் கொண்டாடப்படும் வாடிவாசல் முறையிலிருந்து வடக்கு பகுதிகளில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் வித்தியாசப்படுகிறது. வாடி வாசல் வழியாகத் திறந்து விடப்படும் காளைகள் மிகவும் ஆக்ரோசமாக வரும்போது அதனை இளைஞர்கள் அடக்கும் விதமாகவே தென் பகுதியில் விளையாடப்படுகிறது. தமிழகத்தின் வடபகுதிகளில் வடக்கயிற்றின் மூலமாகக் கட்டப்பட்ட காளைகளை அடக்க முயல்வதும், அதனைத் துரத்திச் செல்வதும், கயிற்றினால் கட்டப்பட்ட காளைகளைத் துரத்திச் சென்று அதன் மீதுள்ள காசினை எடுக்க ஆண்கள் முயல்வதும் என வேறு பட்ட முறையில் நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு அல்லது மாடுபிடித்தல்

சீறி வரும் காளையை அடக்கும் முறையை ஜல்லிக்கட்டு அல்லது மாடுபிடித்தல் என்றே அழைக்கின்றனர்.

மஞ்சுவிரட்டு அல்லது வடம் ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் வட மாவட்டங்களில் காளைகளை பெரிய வடக்கயிறுகளில் கட்டி ஓட விடுவர். காளைகளை கோபமூட்டும் விதமாக பறை ஒலியும் எழுப்பப்படும். சில இடங்களில் காளைகளை அவிழ்த்து விட்டு அதன் பின்னால் ஓடிய படி விரட்டுகின்ற முறைகளிலும் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது.

வேலி ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் சில இடங்களில் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படுகின்றன. ஒரு பெரிய திடலில் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடுவர். பின்னால் இளைஞர்கள் காளைகளைத் துரத்திச் சென்று அடக்குகின்றனர்.

பொல்லேறு பிடித்தல்

பொல்லாத ஏறுகளை அடக்கிப் பிடித்தல் என்ற பெயரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகள் வாடிவாசல் விளையாட்டை ஒத்தே காணப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக் கொண்டாடப்படும் இடங்கள்

தமிழகத்தில் வாடிவாசல் ஜல்லிக்கட்டு மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மதுரை – அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. புதுக்கோட்டை – நார்த்தா மலை, திருவண்ணாமலை – ஆதமங்கலம் புதூர், திருச்சி – பெரிய சூரியூர், நாமக்கல் – அலங்கா நத்தம், சேலம் – தம்மம்பட்டி, கூலமேடு, தர்மபுரி – காரிய மங்கலம் போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் வரவேற்கத்தக்க முறையில் விளையாடப்படுகின்றன.

பண்பாட்டு எழுச்சி

மே 2014 இல் ஜல்லிக்கட்டு போட்டியை உச்சநீதிமன்றம் தடை செய்தது. பின்னர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தது. இதன் தீர்ப்பில் 2016 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அறிக்கையினை மாற்றி ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான தடையை நீக்கியது. பின்னர் பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு விளையாட்டில் முறையான விதிமுறைகளைப் பின்பற்ற வில்லை என்றும் விலங்குகள் வதைக்கப்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்றத்தில் தடை கோரியது. இந்தத் தடையினை எதிர்த்து மதுரையில் 2016 எழும்பிய ஆதரவு குரல் பின்னர் மெரினா புரட்சி எனப் பெரும் தமிழக அடையாளமாக மாறி ஜல்லிக்கட்டு விளையாட்டினை மீட்டது பெரும் எழுச்சியினைக் குறிக்கிறது. தற்போது பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.