Download App

Aadai Review

ஆடை: அமலாபாலின் பொன்னாடை

அமலாபால் நடித்த ஆடை திரைப்படத்தின் டீசர் வெளியான தினத்தில் இருந்தே இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஒரு சில தடைகளை தகர்த்து விட்டு நேற்று மாலை இந்தப் படம் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம் 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிராங்க் ஷோ நடத்தும் குழுவில் அமலாபால் இருக்கின்றார். அவருடைய பிராங்க் ஷோவுக்கு நல்ல வரவேற்பும், தொலைக்காட்சிக்கு நல்ல டிஆர்பியையும்  கொடுத்து வருவதால் அவருக்கும் அவரது குழுவினர்களுக்கும் பாராட்டுக்கள் கிடைக்கின்றது. இந்த நிலையில் அந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் ரம்யா சுப்பிரமணியனிடம் அமலாபால் ஒரு சவால் விடுகிறார். செய்தி வாசிப்பது என்ற வேலையை தன்னாலும் செய்ய முடியும் என்று கூறி அதை ஒரு சிறிய சதி செய்து செய்தும் காட்டுகிறார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அமலாபால் குழுவினர் பணிபுரியும் தொலைக்காட்சி அலுவலகம் திடீரென காலி செய்ய நேரிடுகிறது. இத்தனை வருடம் வேலை பார்த்த தங்களது அலுவலகத்தில் கடைசியாக ஒரே ஒரு இரவு தங்க முடிவு செய்கின்றார்கள் அமலாபாலின் குழுவினர்கள். அமலாபால், ரம்யா மற்றும் மூன்று ஆண்கள் அந்த கட்டிடத்தில் இரவில் தங்கி, மது அருந்துகின்றனர். போதையில் அவர்கள் செய்யும் ஒரு சில விஷயங்கள் சின்ன சின்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மறுநாள் காலையில் அமலாபால் போதை தெளிந்து விழிக்கும்போது தன்னுடைய உடலில் ஒரு ஆடை இல்லாமல் தான் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தன்னுடைய இந்த நிலைக்கு யார் காரணம்? இந்தக் கட்டிடத்தில் இருந்து ஆடை இல்லாமல் எப்படி வெளியே செல்வது? தன்னுடன் இருந்த மற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகள் அவரை அடுத்தடுத்து துளைக்க அந்தப் பிரச்சினையிலிருந்து அவர் எப்படி மீண்டார்? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை

பொதுவாகவே அமலாபால் ஒரு நல்ல நடிகை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் அவர் நடிப்பார். இந்த படத்தில் சற்று வித்தியாசமாக ஒரு சுதந்திரப் பெண்ணாகவும், ஒரு தைரியமான பெண்ணாகவும் நடித்துள்ளார். முதல் பாதியில் தாயிடம் சுதந்திரம் குறித்துப் பேசும் காட்சியில் அவரது நடிப்பில் ஒரு ஃபெமினியிஸம் தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுவதும் அவர் ஆடை இல்லாமல் தான் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு காட்சியில் கூட அருவருப்போ, ஆபாசமோ இல்லை. இதற்காக இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் ஒரு சபாஷ் போடலாம். ஆடை இல்லாமல் இருக்கும் தன்னுடைய நிலையிலிருந்து தப்பிக்க அவர் எடுக்கும் சின்னச்சின்ன முயற்சிகள், அந்த முயற்சிகள் தோல்வி அடையும் போது அவருக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், ஒரு கட்டத்தில் தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொள்வது ஆகிய காட்சிகளில் அமலாபால் நடிப்பு சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய நிலைக்கு காரணமான நபரை சந்தித்தபோது ஏன் இவ்வாறு செய்தாய்? என்று கேட்பதும் அதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தினால் அதிர்ச்சி அடைவதும் அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள்

செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கும் ரம்யா, அமலாபால் தாயாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் விவேக் பிரசன்னா உள்பட அனைத்து நட்சத்திரங்களும் அவரவர்களின் கேரக்டரை மெருகேற்றும் வகையில் சிறப்பாக நடித்துள்ளனர். பிரதீப்குமார் இசையில் ஒரு பாடல் மிக அருமை. பின்னணி இசை சூப்பர். குறிப்பாக இரண்டாம் பாகத்தின் பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது. விஜய் கார்த்தி கண்ணனின் ஒளிப்பதிவில் நிர்வாணக் காட்சிகளை எந்த அருவருப்பும் இல்லாமல் காட்டியிருப்பது அவரது திறமையை வெளிப்படுத்தியுள்ளது. 

இயக்குனர் ரத்னகுமார் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான மிகச்சரியான ஒரு கருத்தை இந்த படத்தில் மனதில் பதியும்படியும் கன்னத்தில் அறையும்படியும் கூறியுள்ளார். பெண்ணியம் பேசும் பெண்கள், சுதந்திரம் என்றால் என்ன என்பதற்கான அர்த்தம், மீடியா ஊழியர்களிடையே ஏற்படும் ஈகோ, ஆகிய காட்சிகள் எந்த படத்திலும் பார்க்காத புதிய காட்சிகள். சுதந்திரக்கொடி என்ற பெயரை வைத்துக்கொண்டு உண்மையான சுதந்திரம் என்பது என்ன என்றே தெரியாமல், சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் மக்களுக்கு இந்த படம் ஒரு பாடம். குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் நங்கையின் கேரக்டரின் மூலம் இயக்குனர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் இன்றைய இளைஞர்களுக்கு சரியான சாட்டையடி. கடைசி இருபது நிமிடங்கள் அந்த கேரக்டர் மூலம் இயக்குனர் கூறிய கருத்துக்களை இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

விளையாட்டாகவும் பணத்திற்காகவும் செய்யும் ஒரு பிராங்க் ஷோ, மற்றவரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஒரு சாட்டையடி. இந்தப் படத்தைப் பார்த்து பிராங்க் ஷோ எடுப்பவர்கள் திருந்தினால் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படும். பிராங்க் ஷோ என்பது உங்களுக்குத் தெரிந்த ஒரு நபரிடம், அவருக்கே தெரியாமல் செய்வது. ஆனால் உங்களுக்கு தெரியாத ஒரு நபரை நீங்கள் பிராங்க்  செய்தால் அதற்கு பெயர் நியூசென்ஸ் என்று நங்கை கேரக்டர் பேசும் வசனத்தின்போது தியேட்டரில் கைதட்டல். அதேபோல் இன்றைய தேர்வு முறை, தேர்வு எழுதும்போது மாணவர்களுக்கு கொடுக்கும் தொல்லைகள், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான இரண்டு கோலிவுட் பிரபலங்கள் குறித்த காட்சிகள் ஆகியவை இயக்குனரின் டச். மேலும் இன்றைய இளைய சமுதாயத்தினர் எதற்கெடுத்தாலும் செல்பி மோகத்தில் இருப்பதையும், எதையுமே விளையாட்டாக எடுத்துக் கொள்வதையும், ஹேஷ்டாக் என்ற பெயரில் முட்டாள் தனமான கருத்துக்களை டிரெண்ட் செய்வதையும் இயக்குனர் கூறியதை இன்றைய இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். 

மொத்தத்தில் டிரைலரை பார்த்துவிட்டு இதுவொரு அடல்ட் படம் என்று எதிர்பார்த்து செல்ல வேண்டாம். இன்றைய இளைய தலைமுறைகள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் தான் 'ஆடை'
 

Rating : 2.8 / 5.0