விஜய் சேதுபதி நின்று நிதானமாக ஆடும் ' ஏஸ் ' கேம்
7 சிஎஸ் என்டர்டைன்மென்ட் , ஆறுமுக குமார் கதை , இயக்கம் , தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ' ஏஸ் ' . விஜய் சேதுபதி , ருக்மினி வசந்த் , யோகி பாபு , திவ்யா பிள்ளை, பப்லூ பிருத்வீராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ் குமார், டெனெஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுபயா, கார்த்திக் ஜே, நகுலன், ஜஹ்ரினாரிஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து எளிமையான இயல்பான வாழ்க்கை வாழ நினைத்து மலேசியா வந்து சேர்கிறார் ஒருவர் ( விஜய் சேதுபதி). அவர் தன்னைத் தேடி வந்த போல்ட் கண்ணன் என நினைத்து அவருக்கு தங்க இடம் மற்றும் வேலை என அமைத்துக் கொடுக்கிறார் அறிவுக்கரசு ( யோகி பாபு) . அமைதியான வாழ்க்கைக்கு அடையாளமும் கிடைக்கிறது. உடன் அழகான காதலி ருக்மணி ( ருக்மிணி வசந்த்) கசக்குமா. அதற்கு பரிகாரமாக வந்து சேர்கிறது பல பணப் பஞ்சாயத்துகள். இதை எல்லாம் சரி செய்ய போல்ட் கண்ணன் ஆடும் ஆட்டம் தான் இந்த ஏஸ் கேம்.
மகாராஜா மற்றும் விடுதலை படங்களுக்குப் பிறகு ரிலாக்ஸ் மூடில் விஜய் சேதுபதி கொடுத்திருக்கும் திரைப்படம் தான் ஏஸ். அதற்கேற்ப அவருடைய எப்போதுமான ஜாலி கேலி மூடில் மொத்த படமும் கலக்கி இருக்கிறார். ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி - யோகிபாபு கூட்டணி பெரிதாக வொர்கவுட் ஆகவில்லை. அதை இந்தப் படத்தில் ஈடு செய்திருக்கிறார்கள். இருவரின் கம்போ பல இடங்களில் சிரிப்பு வெடி. அங்காங்கே யோகி பாபுவை கோர்த்துவிட்டு செல்லும் விஜய் சேதுபதி பழைய சூது கவ்வும் , நானும் ரவுடிதான் நினைவுகளை கண்முன் கொண்டு வருகிறார்.
யோகி பாபு காமெடியனாகவே நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் நெடுக வருகிறார். நாயகி ருக்மிணி வசந்த் அழகு தேவதை, நடிப்பும் நன்றாகவே வருகிறது. பளிச்சென மின்னுகிறார். கதைக்கும் தேவைப்பட்டிருக்கிறார். கே . ஜி. எஃப் அவினாஷ் , பப்லு உள்ளிட்டோர் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பப்லு ' அவள் வருவாளா ' பட பிரித்வி கதாபாத்திரத்தின் மிச்சமாக தெரிகிறார்.
உருகுதே உருகுதே... பாடல் ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் கரண் பி ராவத் ஒளிப்பதிவும் ஒன்று சேர்ந்து நம்மை உருக செய்கிறது. மலேசியாவின் அழகையும் மிக அற்புதமாக காட்சிப் படுத்தியிருக்கிறார். சாம். சிஎஸ் பின்னணியும் அதிரடி. ஃபென்னி ஆலிவர் எடிட்டிங்கில் படம் விறுவிறுப்பாகவே செல்கிறது.
" ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம் " படம் ஆறுமுக குமாருக்கு அவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் இந்தப்படம் ஓரளவுக்கு அவருக்கு நற்பெயர் பெற்றுத் தரும். எனினும் மலேசியா போலீஸ் அவ்வளவு முட்டாள்களா. அதே போல் பணத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் பாணியில் கொட்டி வைத்துக் கொண்டு கதை பேசுவது எல்லாம் ஓவர். அவினாஷ் பழைய அசோகன் பாணியில் ஆமா ஏமாத்தி தான்டா ஜெயிச்சேன் எனக் கேட்பதெல்லாம் கிரிஞ்சு லெவல் வில்லன் ரகம். ஒரு கதாநாயகன் கதாபாத்திரத்தையே கடைசி வரை வெளியிடாமல் கதை சொல்லியது புதுமை. ஆனால் அதனை அப்படியே விட்டிருக்கலாம். அதற்கு உரியவரைக் காட்ட வாட்டர்மிலன் திவாகர் எல்லாம் தேவையில்லாத ஆணி.
மொத்தத்தில் முந்தைய மகாராஜா , விடுதலை விஜய் சேதுபதியை மறந்துவிட்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் நிச்சயம் ஏமாற்றம் தராத சுமாரான பொழுதுபோக்கு படமாக இருக்கும் இந்த ஏஸ்.
Rating: 2.75 / 5.0
Showcase your talent to millions!!
മലയാളം Movie Reviews






Comments