பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் மீது வழக்கு!

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

பிரபல ரவுடிகள் தங்களுடைய பிறந்தநாளை வாளால் கேக் வெட்டி கொண்டாடுவார்கள் என்று பல செய்திகள் வெளியாகியதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். அந்த வகையில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஒருவர் தனது பிறந்தநாளின் போது கேக்கை வாளால் வெட்டி கொண்டாடியதை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் துனியா விஜய். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை தனது வீட்டின் முன் பந்தல் போட்டு குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள், நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர் பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடியது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தந்தது

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களின் அடிப்படையில் நடிகர் துனியா விஜய் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பிறந்தநாள் கேக்கை வெட்ட வாளை ஏன் பயன்படுத்தினீர்கள் என்று விளக்கம் கேட்டு போலீசார் துனியா விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நோட்டீசை அடுத்து போலீஸ் நிலையத்தில் ஆஜராக துனியா விஜய் இது குறித்து விளக்கம் அளித்ததாகவும் அதன்பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், கேக்கை வெட்ட வாளை பயன்படுத்தியதாகவும் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது