close
Choose your channels

சாலையின் நடுவே தூக்கிலிடுங்கள்… உறுப்பை ஊனமாக்குங்கள்… ஹத்ராஸ் சம்பவம் குறித்து நடிகை மதுபாலா காட்டம்!!!

Tuesday, October 6, 2020 • தமிழ் Comments

சாலையின் நடுவே தூக்கிலிடுங்கள்… உறுப்பை ஊனமாக்குங்கள்… ஹத்ராஸ் சம்பவம் குறித்து நடிகை மதுபாலா காட்டம்!!!

 

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகை மதுபாலா ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து காட்டமான கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில் பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும்… உறுப்பை ஊனமாக்க வேண்டும் என்பது போன்ற காட்டமான கருத்துகளையும் வெளிப்படுத்தி இருககிறார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பட்டியலினப் பெண் (19 வயது சிறுமி) பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தற்போது சிபிஐ விசாரணையை நாடியிருக்கிறது யுபி அரசு. மேலும் உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் இந்த வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு திரையுலகப் பிரபலங்களும் இந்தச் சம்பவம் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ  காட்டமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை மதுபாலா தற்போது தனது கருத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

அதில் வழக்கமாக சிவப்பு நிற லிப்ஸ்டிக், மேக் அப் ஒப்பனைகளுடன் திரையில் தோன்றுவதை கவனமாகக் கொண்டிருக்கும் மதுபாலா, இம்முறை ஒப்பனையின்றி நிஜத் தோற்றத்துடன் வந்திருக்கிறேன் எனப் பேச ஆரம்பித்த அவர் கொரோனா ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைக் குறித்தும் சில நிமிடங்கள் பேசுகிறார். பின்னர் ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் குற்றவாளிகளின் மனநிலை, சமூக இயல்பு போன்றவற்றைக் குறித்து மிக ஆவேசமாகப் பேசத் தொடங்குகிறார்.

அதில், “சட்டத்தை இயற்றுபவர்களும் அரசாங்கமும் பழைய நடைமுறைகளை ஓரங்கட்டி வையுங்கள் என்று வலியுறுத்துகிறேன். ஒரு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட நபரை பிடித்தால் அவனை சாலையின் மத்தியில் தூக்கிலிடுங்கள், உறுப்பை ஊனமாக்குங்கள். அந்த காட்சியை எல்லா தொலைக் காட்சிகளிலும் காட்டுங்கள். அவனுக்கு அளிக்கப்படும் தண்டனையை காண்பவர்கள் மனதில் நடுக்கம் ஏறபட வேண்டும். ஒவ்வொரு முறையும் பாலியல் வல்லுறவு சிந்தனை மனதில் தோன்றும்போது அதை நாம் செய்யலாமா என எண்ணத்தோன்றும்போது பொதுவெளியில் தூக்கிலிடப்படும் காட்சிகள் மனதுக்குள் தோன்றி அந்த செயலை செய்யாமல் தடுக்க வேண்டும்.

எந்த வயதிலும் உள்ள எல்லா பெண்ணையும் கேளுங்கள். அவர் அருவருக்கத்தக்க உணர்வை எதிர்கொண்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது, உங்களுடைய ஆன்மா என்ன நினைக்கிறது என்று கேட்டுப்பாருங்கள். அது நெரிசலான இடத்திலோ பொதுபோக்குவரத்து பேருந்திலோ தேவையற்ற தோள் உரசலாக இருந்தாலும் கூட அது என்ன உணர்வைத் தருகிறது என அவர்களிடம் கேளுங்கள். அப்படி உரச நினைப்பவர்களின் குலை நடுங்க வேண்டும், ஆன்மா நடுங்க வேண்டும்.

அதுபோலத்தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உருவம் சிதைக்கப்பட்டு பிறகு ஒரு பெண் கொல்லப்படும் போதும் அதை செய்தது ஒரு சக மனிதர் என நம்பும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். நமது சிறுமிகளுக்கோ பெண்களுக்கோ அதிகாரமளித்து விட்டு நாம் அத்தகைய குற்றத்துக்கு எதிராக நிற்கிறோம் என்று நின்று கொண்டால் மட்டும் போதாது.

நாம் சிறுவன், சிறுமி என்பதற்கு முன்னால் நாம் ஒரு மனிதப்பிறவி ஆண், பெண்ணுக்கு ஒரே மாதிரியாக அதிகாரமளியுங்கள். மனிதனுக்கு அதிகாரமளியுங்கள் ஒன்றாக வாழ்வது எப்படி என்பதை எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்களுக்கும் அதுபற்றி சொல்லிக் கொடுங்கள்” என ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ காட்சி ஆரம்பத்தில் பெரிதாகக் கவனத்தை ஈர்க்க வில்லை என்றாலும் தற்போது இணையத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை மதுபாலாவின் இந்தக் கருத்துகளை தற்போது நடிகை குஷ்பு டேக் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz