ஜோர்டானில் சிக்கி கொண்ட மணிரத்னம் பட நடிகர்: முதல்வரிடம் மீட்க கோரிக்கை

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பரவலாக கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு நாட்களில் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், சினிமா படப்பிடிப்புகள் உள்பட அனைத்து பணிகளும் முடங்கி உள்ளது.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகரும் தமிழில் மணிரத்னம் இயக்கிய ’ராவணன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவருமான பிரித்திவிராஜ் நடித்து வரும் ’ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜோர்டான் நாட்டில் நடைபெற்றது.

ஆனால் திடீரென இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மற்றும் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் பிருதிவிராஜ் உட்பட 58 பேர் படக்குழுவினர்கள் ஜோர்டான் நாட்டில் சிக்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பிரித்விராஜ் உள்பட படக்குழுவினர் தாயகம் திரும்ப முடியாமல் இருக்கும் நிலையை அறிந்த கேரள மாநில பிலிம் சேம்பர் இதுகுறித்து கேரள முதல்வரிடம் தகவல் அளித்துள்ளது. ஜோர்டானில் சிக்கியிருக்கும் பிரித்திவிராஜ் உள்பட 58 பேரையும் கேரளாவுக்கு பத்திரமாக அழைத்து வர ஏற்பாடு செய்யும்படியும் முதல்வரிடம் கேரள மாநில பிலிம் சேம்பர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இதுகுறித்து முதல்வர், மத்திய அரசிடம் பேசி விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.