சாதாரண கணக்கே எனக்கு தெரியாது: காவல்துறை ஆணையரிடம் புகாரளித்த நடிகர் செந்தில் பேட்டி!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

பிரபல காமெடி நடிகர் செந்தில் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு ஒன்றை தொடங்கிய மர்ம நபர் ஒருவர், அதன் மூலம் முதல்வருக்கு எதிராகவும், டாஸ்மார்க் கடை திறப்பிற்கு எதிராகவும் அவதூறான கருத்தை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து நடிகர் செந்தில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ’டாஸ்மாக்கை எதிர்த்து நான் பதிவிட்டதாக போலியான கணக்கில் பதிவு செய்துள்ளார்கள். நான் அவ்வாறு பதிவு செய்யவில்லை. சாதாரண கணக்கே எனக்கு தெரியாது, அவ்வாறு இருக்கும் போது சமூக வலைத்தளத்தில் கணக்கு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது’ என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்

நடிகர் செந்தில் காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நான் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து கொண்டு இருக்கிறேன். கடந்த ஜூன் 12 அன்று எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சில விஷக்கிருமிகள் நான் பதிவு செய்ததுபோல் தமிழக அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் அவதூறான கருத்துக்களை டுவிட்டரில் போலியாக பதிவிட்டுள்ளார்கள். ஆகவே இவ்விஷயத்தில் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியான பதிவுகளை பதிவு செய்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் கடந்த ஜூன் 12ஆம் தேதி எனது போலியான பெயரில் வெளியான டுவிட்டர் பதிவை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று செந்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.