தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் விஷால்…கூடவே விடுத்த கோரிக்கைகள்?

முதல் முறையாக தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் இவர் சில கோரிக்கைகளை முன்வைத்தாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் “எனிமி”, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் “துப்பறிவாளன் 2”, சரவணன் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடித்து வரும் இவர் தற்போது இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ள புதுப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் தமிழகத்தில் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, “முதல்வரை சந்தித்து வாழ்த்து கூறினேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்துக் கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல் மருந்து வாங்ககூட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்கினேன்.

இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்துக் கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு கண்டிப்பாக அதற்கான ஆவணத்தை செய்து தருகிறேன்” என்று உறுதி அளித்ததாகவும் அத்துடன் கவனமாக இருக்க வலியுறுத்தியதாகவும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

அதோடு முதல் முதலாகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினையும் நடிகர் விஷால் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.