நடிகை ஆச்சி மனோரமா பிறந்த தினம் இன்று...

  • IndiaGlitz, [Tuesday,May 26 2020]

 

தமிழ்ச் சினிமா உலகில் நடிப்பிற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒரே நடிகை ஆச்சி மனோரமா. 5000 மேடை நாடகங்கள், 1500 திரைப்படங்கள் என்ற இவர் ஏற்ற கதாபாத்திரங்களின் எண்ணிக்கையே பிரமிக்க வைக்கிறது. அதிலும் இவரின் நடிப்பு, குரல் வளம், குணச்சித்திரம், நகைச்சுவை என்று அடுத்தடுத்த பரிமாணங்கள் தமிழ்ச் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாபெரும் ஆளுமை என்றே சொல்ல வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா. தன் கணவர், தன் தங்கையையே இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்ற ஏமாற்றத்தை தாங்க முடியாத இவரது அம்மா காரைக்குடியில் வந்து தஞ்சமடைந்தார். அப்போது மனோரமாவிற்கு மிகவும் சிறிய வயது. தெருவின் ஓரத்தில் ஒரு பலகாரக்கடையும் இவரது அம்மா வைத்திருந்தார். குழந்தை மனோரமாவின் பேச்சும் குரல்வளமும் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அட்டகாசமாக பாடும் திறமையும் சிறிய வயதிலேயே இவரிடம் காணப்பட்டது. இத்தனை அம்சங்களையும் வெளிப்படுத்த முதலில் நாடக மேடையில் தலைகாட்ட ஆரம்பித்தார் மனோரமா.

மேடையில் இவரது நடிப்பை பார்த்து எஸ்எஸ்ஆர் பிரமித்துப் போனார். அதன் பயனாக பல நாடகக் குழுக்கள் இவரை வரவேற்றன. அடுத்து கவிஞர் கண்ணதாசன், தான் சொந்தமாக தயாரித்த படத்திலேயே அறிமுகப் படுத்தினார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் முகம் காட்ட ஆரம்பித்தார். கோபி சாந்தா என்ற பெயர் மனோரமா என்று மாறியது. அடுத்து அவரது கதாபாத்திரங்கள் காமெடி, குணச்சித்திரங்களை நோக்கி பயணம் செய்தது. இப்படி படிப்படியாக ஏற்றம் கண்ட இவரது அசாத்தியமான நடிப்பினால் 5 முதலமைச்சர்களுடனும் நடிக்கும் பெரும் பாக்கியத்தையும் இவருக்குப் பெற்று தந்தது. ஜெயலலிதா, எம்ஜிஆர் நடித்த படங்களில் இவர்களுக்கு அடுத்த முக்கிய கதாபாத்திரமாக மனோரமா இருந்தார். தெலுங்கில் என்டி. ராமாராவ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதியோடு மேடை நாடகங்களில் கைக்கோர்த்திருக்கிறார்.

தில்லாம்பாள் மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசனோடு இவர் நடித்த கதாபாத்திரத்தை தமிழ் சினிமா உலகில் எவரும் மறந்து விட முடியாது. ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரத்தில் அற்புதமான தனது நடிப்பினால் காரைக்குடி கலாச்சாரத்தை அப்படியே கண் முன் காட்டியிருப்பார். அதோடு இவரது சொந்த ஊர் காரைக்குடி என்பதனாலும் இவரை அதற்கு பின்பு தமிழ் ரசிகர்கள் அன்போடு ஆச்சி என்றே அழைக்க ஆரம்பித்தனர். சிவாஜி, ஜெய் சங்கர், எஸ்எஸ் முத்துராமன், சத்தியராஜ், முரளி, கமல், ரஜினி, விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்களோடு குணச்சித்திரம், துணை நடிகை, காமெடி, ஏன் பல படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார்.

நடிகை, காமெடி, குணச்சித்திரத்தைத் தாண்டி அற்புதமாக பாடும் திறமையும் இவருக்கு இருக்கிறது. “வா வாத்யாரே வூண்டாண்டா” என்று சென்னை லோக்கல் பாஷையிலும் இவர் பாடியிருக்கிறார். “தெரியாதோ நோக்கு” என்ற பாடலில் அற்புதமாக பிராமண பாஷையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். “முத்துக்குளிக்க வாரியளா” என்று தூத்துக்குடியை மொழியையும் பிரபலித்து இருக்கிறார். யாரோடு சேர்ந்து நடித்தாலும் கணக்கச்சிதமாகப் பொருந்தி போகிற திறமையான நடிப்பு வளத்தைக் கொண்டிருந்த சுரங்கம் என்றாலும் அந்தக் கூற்றில் பிழையே இல்லை.

இவரது கலைப்பணியை இதுவரை யாரும் ஈடுகட்ட முடியாத உச்சத்தைத் தொட்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இவரை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு “பத்ம ஸ்ரீ” விருதைக் கொடுத்து இருக்கிறது. அதோடு தமிழக அரசின் கலைமாமணி விருது, புதிய பாதை திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றிருக்கிறார். கேரள அரசி இவரின் கலைத்திறனை பாராட்டி கலா சாகர் விருதை அளித்து இருக்கிறது. மலேசியா தமிழ்மன்றம் இவருக்கு டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருதினை வழங்கி கௌரவித்து இருக்கிறது. இதைத்தவிர சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான அண்ணா விருது, ஜெயலலிதா விருது, எம்ஜிஆர் விருது, என்எஸ்கே விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்து இருக்கிறார். பல முறை ஃபிலிம்பேர் விருதுகளை வாங்கி இருக்கிறார்.

இத்தனை புகழையும் அடுக்கி வைத்துப் பார்த்தால் இவரின் வாழ்க்கையில் ஏற்றம் மட்டுமே இருந்தது போல நமக்குத் தோன்றலாம். ஏணிப்படிகளுக்குப் பின்னால் அத்தனை உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கத்தான் செய்கிறது. காதலித்து திருமணம் செய்தவரை விட்டு பிரிய வேண்டிய கொடுமையான சூழலிலும் தமிழ் ரசிகர்களை தனது நடிப்பினால் சிரிக்க வைத்திருக்கிறார் இவர். ஏமாற்றத்தையும் இழப்பையும் அவர் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. பெற்ற ஒரு மகனையும் அன்போடு வளர்த்து அரவணைத்துக் கொண்டார். அற்புதமான நடிப்பையும் ஆளுமையையும் பெற்ற இவருக்கு ரசிகர்கள் தந்த பூரிப்பை மட்டுமே ஊதியமாக அமைந்தது. ஈடு இணையில்லாத நடிப்பை வெளிப்படுத்திய மாபெரும் நடிகை ஆச்சி மனோரமா 10 அக்டோபர் 2015 இல் இந்த உலகத்தை விட்டு சென்றார்.