பிரபல நடிகருடன் நித்யா மேனன் திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Thursday,July 21 2022]

பிரபல மலையாள ஹீரோ ஒருவரை நித்யாமேனன் திருமணம் செய்ய இருப்பதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து நித்யாமேனன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ், மலையாளம் உள்பட பல மொழிகளில் உள்ள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நித்யாமேனன். தமிழில் ’180’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’வெப்பம்’ ’காஞ்சனா’ ’ஓ காதல் கண்மணி’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ உள்பட 4 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவை அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் பிரபல மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இதனை அடுத்து நித்யா மேனன் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். எனது திருமணம் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க வதந்தி என்றும் அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நித்யா மேனன் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளும் தவறானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.