நம்ம ஊரு எவ்வளவோ தேவலைன்னு நினைச்சேன்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து நிவேதா பெத்ராஜ்

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் சமீபத்தில் ஜெயராஜ், அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பத்து நிமிடம் கடை திறந்து வைத்ததால், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். 

இந்த மரணம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. ராகுல் காந்தி முதல் பல பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் உள்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ’டிக் டிக் டிக்’, ‘’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் தமிழ் நடிகை நிவேதா பெத்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் என்னை பல நாட்கள் பாதிப்பு அடைய செய்தது. நான் இதுகுறித்து ஆழமாக யோசித்தேன். சரி, அது அமெரிக்கா.. நம்ம ஊரு எவ்வளவோ தேவலைன்னு நினைச்சேன். ஆனால் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோர்களுக்கு நடந்த கொடுமையை கேள்விப்பட்ட பின்னர், மனிதாபிமானம் எங்கே என்ற கேள்வி எழுகிறது. இந்த சம்பவம் உண்மையிலேயே என் முதுகெலும்பைக் சிலிர்த்திட வைத்துவிட்டது. ஏனெனில் தூத்துக்குடி நகரம் என்பது நான் ஒன்பது வருடங்கள் வாழ்ந்த இடம். ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் ஆத்மா சாந்தியடை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு நடிகை நிவேதா பெத்ராஜ் கூறியுள்ளார்.