நான் உயிரோடு தான் இருக்கிறேன்.. சாகவில்லை.. வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே

  • IndiaGlitz, [Saturday,February 03 2024]

நடிகை பூனம் பாண்டே நேற்று கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக காலமானார் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வந்த நிலையில் இன்று அவர் திடீரென தான் உயிரோடு இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பூனம் பாண்டே வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் தற்போது நலமாக இருப்பதாகவும் பல உயிர்களை பலி வாங்கி உள்ள கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவே தான் இறந்தது போல செய்தியை பரப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’உங்கள் அனைவரிடமும் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நான் இங்கே உயிரோடுதான் இருக்கிறேன், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்னை கொல்லவில்லை, ஆனால் அது ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரை பறித்துள்ளது, இந்த நோயை எப்படி சமாளிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு பலரும் இல்லாததால் தங்கள் உயிரை இழந்து உள்ளனர்

மற்ற வகை புற்றுநோய் போல் இல்லாமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது முற்றிலும் தடுக்க கூடியது. தடுப்பூசி மற்றும் ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை செய்தால் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே இது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டியது அவசியம். இந்த நோயின் தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்வோம்’ என்று கூறியுள்ளார்


நேற்று பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் நோய் காரணமாக காலமானார் என்று அவரது மேலாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த நிலையில், இன்று அவர் மரணமடையவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று வெளியிட்டுள்ள வீடியோ பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவரது மேலாளர் வெளியிட்ட செய்தி உண்மையா? அல்லது இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ உண்மையா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.