close
Choose your channels

5ஆண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி!

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருக்கும்போதே திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 1991-1996 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரக்குமாரி. இவருடைய கணவர் பாபு மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக் கூறி அரசிடம் இருந்து 15.45 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் இந்தப் பணத்தைக் கொண்டு யாருக்கும் உதவிசெய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அரசிடம் இருந்து முறைகேடு செய்ததாக கடந்த 1997 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அமைச்சர், அமைச்சரின் கணவரும் வழக்கறிஞருமான பாபு, சமூகநலத் துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சண்முகம் ஐ.ஏ.எஸ்., அமைச்சரின் உதவியாளர் வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்தியத் தண்டனை சட்டத்தின்கீழ் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்து முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவருடைய கணவர் பாபுவிற்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளித்தது. மேலும் கிருபாகரன் இறந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல அமைச்சரின் உதவியாளர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரும் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.