அஜித் ரசிகர்களால் பிரான்ஸ் திரையரங்கிற்கு நஷ்டம்: இனி தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகாதா?

  • IndiaGlitz, [Saturday,August 17 2019]

அஜித் ரசிகர்களால் பிரான்ஸ் நாட்டில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ்' என்று திரையரங்கு நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவால் இனி அந்தத் திரையரங்கில் தமிழ் படங்கள் திரையிடப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் 'லீ கிராண்ட் ரெக்ஸ்' என்ற திரையரங்கில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதே பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. இதுவரை 'சர்க்கார்', 'பேட்டை', 'விசுவாசம்' போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மட்டுமே இங்கு திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் திரையிடப்பட்டது

இந்த திரைப்படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் தமிழகத்தில் உள்ள திரையரங்கில் செய்வது போலவே திரையின் முன் ஆடிப்பாடி திரையில் அஜித் தோன்றிய போது அவரை தொட்டு கும்பிட்டுள்ளனர். இதனால் திரையரங்கின் திரைச்சீலை சேதமடைந்துள்ளது. இந்தத் திரையை மாற்ற ரூ 5.5 லட்சம் நஷ்ட ஈடாக திரையரங்க நிர்வாகத்திற்கு வினியோகஸ்தர்கள் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து 'லீ கிராண்ட் ரெக்ஸ்' திரையரங்கில் இனிமேல் எந்த தமிழ்த் திரைப்படமும் திரையிடப்பட மாட்டாது என்ற முடிவை திரையரங்கு நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

அஜித்ரசிகர்களின் இந்த செயலை பிரான்ஸ் நாட்டில் வினியோகஸ்தர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும் அஜித் ரசிகர்களின் இந்த செயலை விஜய் ரசிகர்கள் கடுமையாக கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது