1000 புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 6 விமானங்கள் ஏற்பாடு செய்த சூப்பர் ஸ்டார் நடிகர்
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே சென்றதும், செல்லும் வழியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் துன்பம் அடைந்தனர் என்பதும் பெரும் சோகக்கதை.
இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்கள் தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மும்பையில் சிக்கிய 200 தமிழர்களையும் அவர் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சோனு சூட்டை அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உதவி செய்துள்ளார். அவர் ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களை 6 விமானங்களில் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர், அலகாபாத், வாரணாசி ஆகிய மூன்று நகரங்களுக்கு தலா இரண்டு விமானங்கள் ஏற்பாடு செய்து அதில் ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணம் செய்ய அமிதாப்பச்சன் அவர்கள் உதவி செய்துள்ளார். இந்த உதவியை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.