close
Choose your channels

கலைஞர் ஒரு சகாப்தம்...! கட்டுரையில் அடக்க முடியாத தமிழ்க்கடல் கருணாநிதி....!

Thursday, June 3, 2021 • தமிழ் Comments

தமிழகத்திற்கு புதிய செயல்தலைவனை தந்த முதல்வன் தான் கருணாநிதி.

அரசியல் தான் விரும்பி எடுத்த பாதை என எப்போதும் ஆழமாக கூறுவார்

திமுக-வின் முன்னாள்  முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு இன்று 97-ஆவது பிறந்தநாள்.  கிட்டத்தட்ட  80 ஆண்டுகள் வாழ்க்கையில், தமிழக அரசியலில் சிறப்பாக கொடிகட்டிப்பறந்தவர்.

உதயசூரியன் தோன்றியது :

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள `திருக்கோளிலி‘  என்று அழைக்கப்படும் ஊர் தான், பின்நாளில் திருக்குவளை ஆனது.  அக்கிராமத்தில் கடந்த 1924-இல்  நாட்டு வைத்தியர் முத்துவேலர், அவரது மனைவியார் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாகவும், ஆண் வாரிசாகவும் பிறந்தவர் தான் கருணாநிதி அவர்கள். இவரின் இயற்பெயர் தட்சணாமூர்த்தி ஆகும். இவருக்கு சண்முகவடிவு மற்றும் பெரியநாயகம் என்ற இரு தமக்கையர்கள் உள்ளனர். சிறிய வயதிலிருந்தே போராட்ட குணமும், ஆராய்ந்து பேசக்கூடிய கல்வியறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாதவராகவும், சிறிய வயது முதல் தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாகவும் இருந்துள்ளார். தன்னுடைய தகப்பனார் ஏற்பாடு செய்திருந்த இசைபயிற்சி வகுப்பில் ஏற்றத்தாழ்வுகளை உணர்ந்தவர், அங்கு முற்றிலுமாக செல்வதை தவிர்த்து விட்டார். இந்த இளம் சூரியன் தான் வருங்காலத்தில், தமிழகத்தையே ஆளக்கூடிய, இமாலய சூரியனாக உருவெடுக்கும் என்று பலருக்கும் தெரிந்திருக்காது.

கல்வி பயின்றது:

தன்னுடைய ஆரம்பக் கல்வியை திருக்குவளையில் பயின்றவர், அதன்பின் உயர்நிலைக்கல்வியை திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். பள்ளிப்பருவத்திலிருந்தே படிப்பு, கவிதை, பேச்சாற்றல் என பன்முகத்திறமை கொண்டவராக இருந்துள்ளார்.  தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது  "நட்பு" என்ற தலைப்பில் மேடையில் துவங்கிய பேச்சு, 80 ஆண்டுகாலம் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது. அதேபோல் ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களிலும் மிகுந்த ஆர்வமுள்ளவராகவே இருந்துள்ளார் கலைஞர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் - வயது 14

1938-இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கி, ஆணையை வெளியிட்ட போது, தமிழகம் முழுவதும் நீதிக்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 7-ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த கருணாநிதி,  தமிழ்க்கொடியை  கையில் பிடித்தவாறு,  “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என்று முழக்கமிட்டு போராடினார். அதற்காக  தன்னுடைய இந்தி ஆசிரியரிடமும், அடிவாங்கினார்.

இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு:

தன்னுடன் படித்த மாணவர்களை இணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். அதற்காக 'இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தையும் உருவாக்கி, தன் 16 வயதில் "மாணவ நேசன்" என்ற பத்திரிக்கையை துவங்கி நடத்தி வந்தார். இதுதான் தற்போதைய "முரசொலி" பத்திரிகை தோன்ற முக்கிய காரணமாக இருந்தது.

17 வயதில் தனது நண்பர்ளான க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோரை இணைத்து, 'தமிழ்நாடு மாணவர் மன்றம்’  என்ற அமைப்பை உருவாக்கினார்.  இதுதான் தற்போதைய திராவிட இயக்கத்தின், முதல் மாணவர் அணியாக கருதப்படுகிறது.

தஞ்சையில் நீதிக்கட்சித்தலைவராக இருந்தவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி, இவரின் பேச்சாற்றலை மிகவும் விரும்பிய காரணத்தால், தன் மகன்களில் ஒருவருக்கு அழகிரி என பெயர் சூட்டி அழகுபார்த்தார்.  இதேபோல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஜோசப், மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னுடைய மற்றொரு மகனுக்கு ஸ்டாலின்  என பெயர் சூட்டினார்.  திரவிட சிந்தனைகளில் தான் ஈர்க்கப்படாமல் இருந்திருந்தால்,  கம்யூனிஸ்ட்  இணைத்திருப்பேன் என்றும் கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை :

கடந்த 1953-ஆம்  ஆண்டில், கல்லக்குடி என டால்மியாபுரம்  ரயில் நிலையத்திற்கு மீண்டும் பெயர் சூட்ட வேண்டும் என்று, தண்டவாளத்தில் தலைவைத்து போராடினார்.  இதுதான் கலைஞருக்கும், திமுகவிற்கு மிகப்பெரிய புகழைத்தேடித்தந்தது, அரசியலில் கருணாநிதி யார் என்றும் தெரியச்செய்தது.

1957- குளித்தலை தொகுதியில் திமுக சார்பாக முதன் முதலாக களமிறங்கி வெற்றியும் பெற்று, தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

1961 -  திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

1967 - தமிழக அரசின்  பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்

1969 - திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பதவியேற்றார்

1971- 2-ஆம்  முறை தமிழக முதல்வராக பதவியேற்றார்

1989 - 3 ஆவது முறையாக தமிழக முதல்வரானார்.

1996 -  நான்காவது முறை முதல்வர் பதவி வகித்தார்

2006 - ஐந்தாவது முறை தமிழகத்தில் முதல்வராக இருந்தார்

தமிழகத்தை 5 முறை முதல்வராக ஆட்சி செய்த பெருமை கருணாநிதிக்கே உண்டு,  இவர் களமிறங்கிய அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக  பணிபுரிந்த பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு.  திமுக-வில் சுமார் 50 ஆண்டுகள் தலைவராகவும், தமிழக அரசியலில் 80 ஆண்டுகள்  கோலோச்சிய பெருமை  வரலாற்றில் பொன்னெழுத்துக்களால்  பொறிக்கப்படவேண்டியவை. தமிழக மக்களால் "கலைஞர்" என அன்போடு அழைக்கப்பட்டவர், ஜனங்களை பார்த்து "என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என்று அழைத்தால் அவர்கள் சொக்கிவிடுவார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பொதுமக்களிடம் நன்மதிப்பை சம்பாதித்து வைத்திருந்தார்.

ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் :

1.மெட்ராஸ் ஸ்டேட்  என்பதை தமிழ்நாடு என மாற்றினார்.

2.கை ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா ஆனது.

3.குடிசைமாற்று வாரியத்தை உருவாக்கினார்.

4.விடுதலை தினத்தன்று ஆளுநர் கொடியேற்றும் முறையை, முதல்வர்கள் கொடியேற்றலாம் என்ற புதுமையைத் தந்தவர்.

5.வேற்று மொழிச்சொற்களை, சமூகத்தில் மக்களால் இழிவாக பேசப்படும் சொற்களை மாற்றி, தமிழ் மொழியில் அழகாக கையாண்ட பெருமை கலைஞர் கருணாநிதியையே சாரும்.

6.மூன்றாம் பாலினத்தவரை திருநங்கைகள் என்றும், விதவைப்பெண்களை கைம்பெண்கள் என்றும்,

உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்றும் அழைக்கவேண்டும் என்று மாற்றியமைத்தார்.

7.இலவச கண் சிகிச்சை திட்டம், தொழுநோயாளிகள்-பிச்சைக்காரர்கள் திட்டம்,  ஆலயங்களில் கருணை இல்லங்கள் உருவாக்குவதல், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி  துறைகள், போலீஸ் கமிஷன், பெண்களுக்கு சொத்துரிமை, தியாகிகளுக்கு ஓய்வூதியம், மாணவர்களுக்கு இலவச பேருந்து, உழவர் சந்தை, சமத்துவபுரம், இலவச தொலைக்காட்சி, மின்விசிறி, அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம்,108 ஆம்புலன்ஸ் திட்டம்  உள்ளிட்ட பல திட்டங்களை உருவாக்கினார்.  

8.கலைஞரின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம், இவரின் நடைப்பயிற்சியும், யோகப்பயிற்சியும் தான்.

தமிழ் சினிமா:

தமிழ் மொழியிலும், சினிமாவிலும் ஆர்வமுள்ள கருணாநிதி அவர்கள் ஏராளமான திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும், ஒரு சில படங்களிலில் தனது திராவிட சிந்தனைகளையும் மக்களுக்கு விதைத்து வந்தார்.

இவர் முதன் முதலாக பணியாற்றிய படம் கடந்த 1947-இல் வெளியான ராஜகுமாரி, பணிபுரிந்த கடைசிப்படம் பொன்னர்சங்கர், சென்ற 2011 -ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமாவில் 75-க்கும் அதிகமான திரைப்படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.

தூக்குமேடை, மணிமகுடம், நானே அறிவாளி  உள்ளிட்ட மேடை நாடகங்களில், கருணாநிதி அவர்கள் நடித்துள்ளார்.

"பகட்டு தன தங்கையை மிரட்டியது, பயந்து ஓடினாள், பணம் என் தங்கையை துரத்தியது, மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை துரத்தியது - ஓடினாள், ஓடினாள்: வாழ்க்கையின்  ஓரத்திற்கே ஓடினாள், அந்த ஓட்டத்தை தவித்திருக்க வேண்டும், வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்" என்ற கலைஞர் எழுதி, சிவாஜி பேசிய வசனம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய எண்ணத்தூரிகைகளில் உள்ள வார்த்தைகளை வசனமாக்கியவர்.

தமிழ் எழுத்தாளராக,,,,

15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள் என தனது எழுத்துக்கள் மூலமாக, தமிழுக்கும், மக்களுக்கும் அரும் தொண்டாற்றியுள்ளார்.  உடன் பிறப்பே, நண்பனுக்கு  போன்ற தலைப்புகளில், 7000-த்திற்கும் அதிகமான மடல்களை இயற்றியுள்ளார்.  

திருக்குறள் உரை, சங்கத்தமிழ், குறளோவியம்,தென்பாண்டி சிங்கம், ரோமாபுரி பாண்டியன்  போன்ற 178-க்கும் அதிகமான உரைநடை, இலக்கிய  நூல்களை எழுதியுள்ளார். கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல், "நெஞ்சுக்கு நீதி" என்பதாகும்.

ஐயன் வள்ளுவனுக்கு குமரியில் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம், 2010-இல் கோவையில் தமிழுக்காக பிரமாண்டமாக நடத்திய "செம்மொழி மாநாடு"  உள்ளிட்ட செயல்களால் தமிழுக்கு பெருமை சேர்த்தார்.  கருணாநிதி தமிழ் மீது வைத்த அளவற்ற காதல் அளப்பறியாதது.

கடந்த 2009-இல் "உலக கலைப்படைப்பாளி விருது"- பெற்றார். கலைஞரின் அரசியல் தொண்டு, தமிழுக்கு ஆற்றிய சேவை, சினிமாவில் புதிய படைப்புகள் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்துள்ள கலைஞரின், பெருமைகள் பொன் எழுத்துக்களில் தான் பதிக்க வேண்டியவை.  இந்த 98-ஆவது பிறந்தநாளில் அவரின் புகழ் பாடுவதில் பெருமை கொள்கிறோம். இக்கானகம் உள்ளவரை கலைஞரின் புகழ் சிறக்கட்டும். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz