தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு கார் பரிசு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இந்திய நிறுவனம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 33 ஆண்டுகால வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இளம் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சிராஜ் நவ்தீப், சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பரிசு அறிவித்து இருக்கிறது.
பிரிஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் அறிமுக வீரர்களாக இந்த 6 பேரும் களம் இறங்கினர். மேலும் இவர்களின் விளையாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் களத்தில் இவர்கள் காட்டிய அதிரடி பல மூத்த வீரர்களையும் மலைக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும். இதனால் பலரும் அறிமுக வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தொழில் நிறுவனமான மஹேந்திரா கார் நிறுவனம் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சிராஜ் நவ்தீப், சைனி, சுப்மன் கில் ஆகிய 6 பேருக்கும் கார் பரிசினை அறிவித்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பை அதன் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.