ஊழல் ஒழிப்புப் பணிக்காக சர்வதேச விருது… அசத்தும் இந்தியப் பெண்மணி!
ஊழல் ஒழிப்பு என்ற கொள்கையை வைத்துக் கொண்டுதான் இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் ஆகின்றன. ஆனால் ஊழல் ஒழிப்பில் அவை எந்த அளவிற்கு கவனம் செலுத்துகின்றன என்பது இன்றளவும் கேள்விக்குரியாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் இந்திய பெண்மணி ஒருவர் ஊழல் ஒழிப்புப் பணிக்காக அமெரிக்கா வழங்கும் சர்வதே விருதை பெற்று இருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ்க்கு அமெரிக்காவின் சர்வதேச ஊழல் ஒழிப்பு சாம்பியன்ஸ் விருது வழங்கப்பட்டு உள்ளது. இவர் கடந்த 20 ஆண்டுகளாக தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதோடு சடார்க் நாகரீக சங்கதன் என்ற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு ஊழலை குறித்தும், அரசியல் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகளை செய்து வருகிறார்.
அதோடு பொதுத்துறை ஊழியர்களின் பொறுப்புகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்களது செயல்பாடுகள் ஆகியவை அடங்கிய பட்டியல்களை தயார் செய்து அதில் உள்ள குற்றங்களை பொதுவெளியில் எடுத்து வைக்கிறார். மேலும் இவரைப் போல ஊழலை வெளி கொண்டுவருவோர் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்வோரை இந்த அமைப்பு தொடர்ந்து பாதுகாத்தும் வருகிறது. இந்த பணிகளுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு அவருக்கு சர்வதேச ஊழல் ஒழிப்பு சாம்பியன்ஸ் விருது வழங்கி கவுரவித்து உள்ளது.